கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை பிரதேச செயலகத்துக்கு அருகில் செவ்வாய்க்கிழமை (8) மக்கள் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
கல்குடா சூரா கௌன்சில் (மஜ்லிஸ் ஷூரா சபை) இந்த போராட்டத்தை ஏற்பாடு செய்துள்ளது.
கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி, கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை ஆகிய பிரதேச செயலகங்கள் ஆகியவற்றுக்கு எல்லை நிர்ணய ஆணைக் குழுக்களினால் பரிந்துரைக்கப்பட்டவற்றை நடைமுறைப்படுத்துமாறு கோரி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இரு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட எல்லை நிர்ணயம் தொடர்பில் மட்டக்களப்பு அரசாங்க அதிபர் பாரபட்சமின்றி தமது நிர்வாக கடமைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் கடந்த காலங்களில் குறித்த பிரதேச செயலகம் தொடர்பில் ஆணை குழுவினால் பரிந்துரைக்கப்பட்ட விடயங்களை நடைமுறைப்படுத்துமாறும், இனங்களுக்கு இடையில் விரிசலை ஏற்படுத்தும் செயற்பாடுகளை உடனே நிறுத்த வேண்டும் என கோரி இது முன்னெடுக்கப்பட்டுள்ளது.
எல்லை நிர்ணயம் தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மேற்கொண்ட பக்கச்சார்பான நடவடிக்கைக்கு எதிராக தொடர் நாள் போராட்டமாகவே இது முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
இந்த போராட்டத்தில் அரசியல் செயற்பாட்டாளர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், பிரதே முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
இதற்கான தீர்வு கிடைக்கும் வரை இந்த எழுச்சிப் போராட்டம் முன்னெடுக்கப்படும் என ஏற்பாட்டாளர்கள் மேலும் தெரிவித்தனர்.
-எச்.எம்.எம்.பர்ஸான்