கொழும்பு மாநகர சபையில் தேசிய மக்கள் சக்தியே ஆட்சியமைக்கும். ஐக்கிய மக்கள் சக்தி குறைவான ஆசனங்களை பெற்றுள்ளதோடு மாத்திரமின்றி, அக்கட்சியின் மேயர் வேட்பாளர் தொகுதியிலும் தோல்வி அடைந்துள்ளார்.
எனவே, அவர்களால் கொழும்பு மாநகர சபையில் ஆட்சியமைக்க முடியாது என வெளிநாட்டலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
கம்பஹாவில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
கொழும்பு மாநகர சபையில் ஆட்சியமைக்கப் போவது யார் என்பதையே பெரும்பாலானவர்கள் எதிர்பார்த்திருக்கின்றனர்.
கொழும்பு மாநகர சபையில் தேசிய மக்கள் சக்தியிலிருந்தே அதிகளவான உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றனர். 48 உறுப்பினர்கள் எமது கட்சியைச் சேர்ந்தவர்கள்.
ஆனால், ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து 29 உறுப்பினர்கள் மாத்திரமே தெரிவு செய்யப்பட்டிருக்கின்றனர். அவர்களது மாநகர மேயர் வேட்பாளர் தொகுதியில் தோல்வியடைந்துள்ளார். தேசிய மக்கள் சக்தியின் இளம் வேட்பாளருடன் போட்டியிட்டு அவர் தோல்வி அடைந்திருக்கின்றார்.
தொகுதியில் மேயர் வேட்பாளர் தோல்வியடைந்துள்ள நிலையிலும், மாநகர சபையில் ஆட்சியமைக்கப் போவதாகக் கூறுவதற்கு வெட்கமில்லையா? அவர்கள் முயற்சித்தாலும் அதற்கான வாய்ப்பு இல்லை. கொழும்பு மாநகர சபையில் தேசிய மக்கள் சக்தியே ஆட்சியமைக்கும்.
மாநகர சபை, நகரசபை அல்லது பிரதேச சபைகளில் ஆட்சியமைப்பதற்கு தேசிய மக்கள் சக்திக்கும் யாருக்கும் எந்த சிறப்புரிமைகளையோ பணத்தையோ வழங்கி எவரையும் விலைக்கு வாங்கப் போவதில்லை என்பதை பொறுப்புடன் கூறிக்கொள்கின்றேன்.
உறுப்பினர்களை விலைக்கு வாங்கும் மோசமான பழைய முறைமை எமது அரசாங்கம் ஒருபோதும் பின்பற்றாது.
நாம் பெற்றுக்கொண்டுள்ள வெற்றியை பலப்படுத்துவதற்கு ஏனைய உறுப்பினர்கள் விரும்பினால் அவர்களுடன் பொறுப்புக்களைப் பகிர்ந்துகொண்டு மக்களுக்கு சேவையாற்றுவதற்கு தயாராக இருக்கிறோம் என்றார்.
-எம்.மனோசித்ரா