உள்நாடுசூடான செய்திகள் 1

கொம்பனித்தெரு இரட்டை மேம்பாலத்தை திறந்தார் ஜனாதிபதி!

கொம்பனித்தெரு, நீதிபதி அக்பர் மாவத்தை மற்றும் உத்தரானந்த மாவத்தை ஆகிய பகுதிகளை இணைக்கும் வகையில் புகையிரத பாதைக்கு மேலாக நிர்மாணிக்கப்பட்டுள்ள இரட்டை மேம்பாலத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (08) மக்களின் பாவனைக்காக திறந்து வைத்தார்.

இந்தத் திட்டத்தின் அடுத்த கட்ட நிர்மானப் பணிகளை செப்டம்பர் மாதத்திற்குள் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது, மேலும் இந்த முழுமையான திட்டத்திற்கு 5,278,081,272.43 ரூபாய் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

அரச அலுவலகங்கள், வைத்தியசாலைகள், மத வழிபாட்டுத் தலங்கள், உணவகங்கள், திரையரங்குகள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களைக் கொண்ட மிகவும் பரபரப்பான வர்த்தக நகரமான கொம்பனித்தெரு பிரதேசத்தில் அமைந்துள்ள புகையிரத கடவையின் காரணமாக நாளாந்தம் 03 மணித்தியாலங்கள் விரயமாவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

காலதாமதத்தை தவிர்க்கும் வகையில் வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் மேற்கொள்ளப்பட்டு வரும் இத்திட்டத்தின் நிர்மாணப் பணிகளை மாகா பொறியியல் (Maga Engineering) நிறுவனம் மேற்கொண்டு வருகின்றது.

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன, ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர், பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் ஆர். டபிள்யூ. ஆர்.பிரேமசிறி, வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் சமிந்த அதலுவகே, வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் பிரியந்த சூரியபண்டார மற்றும் பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Related posts

பல்கலைக்கழக மாணவர்களுக்கு பகிடிவதை கொடுப்பவர்களுக்கு எதிராக வழக்கு

$35.3 மில்லியன் செலுத்தி டீசல் டேங்கர் ஒன்று விடுவிப்பு

கட்டாரிலிருந்து 264 பேர் தாயகம் திரும்பியுள்ளனர்