விவசாய வணிகம், உணவு மற்றும் ஊட்டச்சத்து மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து ஆராய்வு
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும், கேட்ஸ் நிறுவனத்தின் உலகளாவிய அபிவிருத்திப் பிரிவின் தலைவர் கலாநிதி கிறிஸ் எலியாஸ்(Dr. Chris Elias) தலைமையிலான கேட்ஸ் நிதியத்தின் உயர்மட்டக் குழுவிற்கும் இடையேயான சந்திப்பு இன்று (10) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
இலங்கையின் அபிவிருத்தி தொடர்பான பல முக்கியமான விடயங்கள் பற்றி இங்கு ஆராயப்பட்டது.
விவசாய நவீனமயமாக்கல், உணவு மற்றும் ஊட்டச்சத்து, டிஜிட்டல் உட்கட்டமைப்பு மற்றும் கிராமப்புற சமூகங்களை புதிய தொழில்நுட்பங்களுடன் ஒருங்கிணைப்பது போன்ற விடயங்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டது.
கேட்ஸ் நிதியம் இந்நாட்டில் செயல்படுத்த எதிர்க்கும் ஒரு முதன்மைத் திட்டமான உள்ளடக்கிய டிஜிட்டல் விவசாய பரிமாற்றத் திட்டம் (Inclusive Digital Agriculture Transformation) குறித்து கலாநிதி எலியாஸ் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கு தெளிவுபடுத்தினார்.
விவசாயத் துறையில் தரவு அடிப்படையிலான முடிவெடுப்பதை ஒத்துழைக்கும் அதேவேளை சிறிய அளவிலான விவசாயிகளுக்கு சேவைகளை வழங்குவதும் முக்கியம் என்று சுட்டிக்காட்டினார்.
இந்தத் திட்டம் விவசாய நவீனமயமாக்கல் மற்றும் கிராமப்புற சமூகத்தின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துதல் மற்றும் நிலையான வளர்ச்சிக்கான இரு தரப்பினரின் அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கூறினார்.
குறைந்த மற்றும் நடுத்தர வருமான நாடுகளில் வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்துவதில் சவால்களை எதிர்கொள்வதன் மூலம் கேட்ஸ் நிதியம் பெற்றுள்ள நிபுணத்துவம் மற்றும் அனுபவத்தை ஜனாதிபதி பாராட்டினார்.
நவீன உலகளாவிய தொழில்நுட்பங்களுடன் கிராமப்புற சமூகங்களை ஒருங்கிணைக்கும் நாட்டின் முயற்சிகளை ஆதரிக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கேட்ஸ் நிதியத்திடம் கோரிக்கை விடுத்ததோடு இலங்கையுடனான அதன் ஒத்துழைப்புக்கு நன்றி தெரிவித்தார்.
டிஜிட்டல் பொருளாதாரத்திற்கான இலங்கையின் மூலோபாயத் திட்டத்தை ஆதரிப்பதாகக் கூறிய கேட்ஸ் நிதியத்தின் பிரதிநிதிகள், இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும் வளர்க்கவும் விவசாயத் துறையின் டிஜிட்டல் மாற்றத்திற்கு அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று கூறினர்.
கால்நடை வளர்ப்பு மற்றும் பால் உற்பத்தி போன்ற துறைகளை உள்ளடக்கிய ஒரு விரிவான சமூக-பொருளாதார அபிவிருத்தி நிகழ்ச்சி நிரலுக்கு முழு ஆதரவளிப்பதாக அவர்கள் உறுதியளித்தனர்.
நாட்டின் பிரஜைகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதில் அரசாங்கமும் ஜனாதிபதியும் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயல்பட்டதற்கு நன்றி தெரிவித்த கலாநிதி கிறிஸ் எலியாஸ், இலங்கையில் நடைபெற்று வரும் புதிய மாற்றத்தைப் பாராட்டினார். இலங்கையுடன் ஒரு பரந்த உறவை ஏற்படுத்த வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி தெரிவித்தார்.
அனைத்தையும் உள்ளடக்கி அரசாங்கம் முன்னெடுக்கும் அபிவிருத்தி நிகழ்ச்சி நிரலை வலுப்படுத்த பங்களிக்க முடிந்ததற்கு நன்றி தெரிவித்த அவர், விவசாயம், உணவு மற்றும் ஊட்டச்சத்து மற்றும் டிஜிட்டல் உள்கட்டமைப்பு ஆகிய துறைகளில் முன்னேற்றம் மற்றும் நிலையான தீர்வுகளுக்கான பொதுவான கருத்தாடலை உருவாக்குவதற்கான இரு தரப்பினரின் உறுதிப்பாட்டை இந்த ஒத்துழைப்பு பிரதிபலிக்கிறது என்றும் கூறினார்.
டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, டிஜிட்டல் பொருளாதாரம் குறித்த ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி ஹான்ஸ் விஜேசூரிய, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிகச் செயலாளர் ரோஷன் கமகே, கேட்ஸ் நிதியத்தின் தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கான பிராந்திய பிரதிநிதி கலாநிதி ஜமால் கான், திட்ட ஆலோசனை ,தகவல் தொடர்பு, அபிவிருத்தி மற்றும் வாய்ப்புகள் தொடர்பான பணிப்பாளர் அர்ச்சனா வியாஸ், தொழில்முனைவு தரவு தீர்வு தொடர்பான பணிப்பாளர் துஷான் விஜேசிங்க, Connect To Care தலைவர் சந்தித சமரநாயக்க ஆகியோர் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.
-ஜனாதிபதி ஊடகப் பிரிவு