சபரகமுவ மாகாணத்தில் குறைந்த வருமானம் பெறுபவர்களின் மருத்துவ உதவிக்காக 7.5 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக சப்ரகமுவ மாகாண
ஆளுநர் சம்பா ஜானகி ராஜரத்ன தெரிவித்தார்.
சப்ரகமுவ மாகாண சபை கட்டிடத் தொகுதியில் நேற்று முன்தினம் (11) இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மாகாண ஆளுநர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
சமூக நலன், நன்னடத்தை மற்றும் குழந்தை பராமரிப்பு, கிராமப்புற மேம்பாடு மற்றும் கிராமப்புற கைத்தொழில்கள் அமைச்சின் சமூக சேவை நிதியத்தின் மூலம் பிரதேச செயலகப் பிரிவு மட்டத்தில் இந்த உதவி வழங்கப்படும்.
இதுவரை 105 குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு மருத்துவ உதவி தொகை வழங்கப்பட்டுள்ளது.
இதற்கென 3.148 மில்லியன் ரூபாய் காசோலை மூலம் சம்பந்தப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன் 50,000 க்கு மேல் மருத்துவ உதவிக்காக 32 பேருக்கு விரைவில் அதற்கான காசோலைகள் வழங்கப்படும். இதற்காக 4.4 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த மருத்துவ உதவியைப் பெற விரும்பும் சமூகத்தினர் அருகிலுள்ள பிரதேச செயலகத்திற்குச் சென்று சமூக சேவை அதிகாரியை சந்தித்து அதற்கு எவ்வாறு விண்ணப்பிப்பது என்பதைக் தெரிந்துகொள்ளுமாறு சப்ரகமுவ மாகாண ஆளுநர் சம்பா ஜானகி ராஜரத்ன மேலும் தெரிவித்தார்.
-சிவா ஸ்ரீதரராவ் இரத்தினபுரி நிருபர்