1990.07.12 ஆந் திகதி புனித ஹஜ் கடமையினை நிறைவு செய்து வீடு திரும்பிய யாத்திரிகர்கள் மற்றும் வியாபாரிகள் கல்முனை-மட்டக்களப்பு பிரதான வீதியில் குருக்கள்மடம் எனும் இடத்தில் கடத்தி காணாமாலாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டமை தொடர்பில் களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்றும் வரும் வழக்கு இன்றைய தினம் (21.07.2025) திறந்த நீதிமன்றில் அழைக்கப்பட்டது.
கடந்த தவணையில் கௌரவ சட்டமா அதிபர், காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் மற்றும் களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஆகியோரை இன்று நீதிமன்றில் தோன்றுமாறு மன்று கட்டளையிட்டிருந்தது.
அதற்கமைவாக இன்றைய தினம் காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் சட்டத்தரணிகள், களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஆகியோர் மன்றிற்கு சமூகமளித்திருந்தனர். கௌரவ சட்டமா அதிபர் சார்பாக எவரும் இன்றைய தினம் கெளரவ மன்றில் தோன்றியிருக்கவில்லை.
கெளரவ மன்றிற்கு சமர்ப்பணத்தை மேற்கொண்ட காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் சட்டத்தரணி ” குருக்கள்மடம் மனிதப் படுகுழியானது முறையாக தோண்டப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டையே தமது அலுவலகம் தொடர்ந்தும் பேணி வருவதாகவும் குறித்த சந்தேகத்துக்கிடமான மனிதப் புதை குழி அமையப்பெற்றுள்ளதாக நியாயமாக நம்பப்படும் பிரதேசத்தைத் தோண்டுவதற்கான கட்டளையினை மன்று ஆக்குமிடத்து தாங்கள் அவதானிப்பாளர்களாகச் செயற்படத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.
மேற்படி சமர்ப்பணத்தை கருத்திற்கொண்ட கௌரவ நீதிமன்றம் குருக்கள்மடம் மனிதப் புதைகுழியை தோண்டுவதற்கான மீள் திட்ட வரைபை கெளரவ மன்றிற்குச் சமர்ப்பிக்குமாறு கொழும்பு சிரேஷ்ட சட்ட வைத்திய அதிகாரிக்கு கட்டளையாக்கியதோடு அடுத்த தவணைத் தினத்தில் மன்றில் முன்னிலையாகுமாறு சட்டமா அதிபருக்கும் கட்டளை ஆக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கில் முறைப்பாட்டாளரான அப்துல் மஜீத் ரவூப் சார்பில் குரல் இயக்கத்தின் தலைவர் சட்டத்தரணி முகைமீன் காலித் அவர்களோடு அதன் சட்டத்தரணிகளான முபாறக் முஅஸ்ஸம், ஹஸ்ஸான் றுஷ்தி, எஸ்.எம்.மனாருத்தீன், எப்.எச்.ஏ.அம்ஜாட், ஏ.எல்.ஆஸாத் ஆகியோர் இன்றைய தினம் கெளரவ மன்றில் தோன்றியிருந்தனர்.
குருக்கள்மடம் மனிதப் புதைகுழி விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியினைப் பெற்றுக்கொடுக்கின்ற இடையறாப் பயணத்தில் குரல்கள் இயக்கம் தொடர்ந்தும் செயற்பட்டு வருகின்றது.