அரசியல்உள்நாடு

குருக்கள்மடம் விடயத்தில் அரசாங்கம் தேவையான முழு ஒத்துழைப்புக்களையும் வழங்கும் – ஹிஸ்புல்லாஹ் எம்.பியின் கோரிக்கைக்கு நீதி அமைச்சர் பதில்.

பாராளுமன்றத்தில் நேற்று (10) நிலையியற் கட்டளை 27/2 இன் கீழ், நீதி அமைச்சரிடம் விசேட அறிக்கை சமர்ப்பித்து குருக்கள்மடம் தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் உரையாற்றினார்.

அவர் உரையாற்றுகையில்,

1990 ஆம் ஆண்டு ஜூலை 12 ஆம் திகதி குருக்கள்மடம் பிரதேசத்தில், முஸ்லிம்கள் தமது புனித ஹஜ் கடமையை நிறைவேற்றி விட்டு வீடு திரும்பும் போதே அங்கிருந்த சிறுவர்கள், முதியோர், இளைஞர்கள் என பலர் விடுதலைப் புலிகளால் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர் என குறிப்பிட்டதுடன், பல கோரிக்கைகளை முன்வைத்தார்.

1 – இப் படுகொலைக்கு உடனடி சட்ட நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். அதோடு, ஜனாஷாக்களை தோண்டி எடுக்க தேவையான முழு உதவியும் வழங்கப்பட வேண்டும்.

2 – நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

3 – ஜனாஷாக்கள் அடையாளம் காணப்பட்ட பின், அவர்களின் உடல்கள் இஸ்லாமிய முறைப்படி நல்லடக்கம் செய்யப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இக்கோரிக்கைகளுக்கு பதிலளித்த நீதி அமைச்சர் ஹர்சன நாணயக்கார அவர்கள், பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ் முன்வைத்த மூன்று கோரிக்கைகளையும் அரசு ஏற்றுக்கொள்வதோடு, தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள ஆயத்தமாக உள்ளதாக தெரிவித்தார்.

“நான் குருக்கள்மடம் சென்றமைக்கு ஹிஸ்புல்லாஹ் எம்.பி. நன்றி தெரிவித்தார்; அவருக்கு நானும் நன்றிகளை தெரிவிக்கிறேன். நான் அங்கு விஜயம் செய்து உரிய இடத்தைப் பார்வையிட்டேன். இதற்குத் தேவையான நிதிகளை என்னுடைய அமைச்சின் மூலமாக ஒதுக்கிட நடவடிக்கை எடுப்போம்.

அதேபோன்று, நவீன தொழில்நுட்ப வசதிகள் அல்லது சிறப்பு கமரா போன்றவை இலங்கையில் இல்லாவிட்டாலும், வெளிநாடுகளிலிருந்து அழைப்பித்துத் தேவையான உதவிகளை வழங்கத் தயாராக இருக்கிறோம்.

காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நிதி உதவிகள், வசதி ஏற்பாடுகள், சட்ட உதவிகள், தொழில்நுட்ப நிபுணர்கள் உள்ளிட்ட அனைத்து வளங்களும் வழங்கப்பட்டு, இதனை முழுமையாக செய்து முடிப்போம்” என்று அமைச்சர் உறுதியளித்தார்.

இக்கோரிக்கையை ஏற்றுக்கொண்டதற்கும், வழங்கிய உறுதிமொழிக்குமாக எனது மக்கள் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என ஹிஸ்புல்லாஹ் எம்.பி. தெரிவித்தார்.

-ஊடகப்பிரிவு

Related posts

பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விளக்கினார் – முஜிபுர் ரஹ்மான்

பிரச்சினைகளுக்கு தீர்வு காண அரசு நிதி அமைச்சரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்

கொழும்பில் போலி நாணயத்தாள்களுடன் இருவர் கைது!