அரசியல்உள்நாடு

கிழக்கு மாகாண மக்களின் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை – உதுமாலெப்பை எம்.பி

பொத்துவில், உகன பிரதேங்களுக்கான புதிய கல்வி வலயங்களை அமைக்க கல்வி அமைச்சின் அனுமதியை வழங்குமாறு கல்வி அமைச்சின் ஆலோசனைக் கூட்டத்தில் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை கோரிக்கை

கல்வி அமைச்சின் ஆலோசனைக் கூட்டம் பிரதமர் திருமதி ஹரினி அமரசூரிய தலைமையில் 03.06.2025ம் திகதி பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் நடைபெற்றது,

இவ் ஆலோசனைக் கூட்டத்தில அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை கருத்து தெரிவிக்கையில்,

கிழக்கு மாகாணத்தில் அமைந்துள்ள உகன, பொத்துவில் பிரதேசங்களில் இயங்கி வரும் உப – கல்வி வலயங்களை தனியான கல்வி வலயங்களாக இயங்குவதற்கான செயற்பாடுகள் கடந்த 05 வருட காலமாக முன்னெடுக்கப்பட்டு வந்தன.

கிழக்கு மாகாண கல்வி அமைச்சு, கிழக்கு மாகாண ஆளுநர், உகன – பொத்துவில் பிரதேசங்களுக்கான தனியான .கல்வி வலயங்களை வழங்குவதற்கான சிபார்சுகளை வழங்கியும் மத்திய கல்வி அமைச்சு, அமைச்சரவை தீர்மானம் எடுத்தும் இதுவரையும் உகன, பொத்துவில் பிரதேசங்களுக்கான தனியான கல்வி வலயங்களாக இயங்குவதற்கான அனுமதியினை கல்வி அமைச்சு வழங்காமல் உள்ளது எனத் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில்,
இது தொடர்பாக நான் பிரதமருடன் 06 மாதங்களுக்கு முன்பு கோரிக்கை விடுத்தேன்.

அப்போது கல்வி அமைச்சின் செயலாளர் , திட்டமிடல் பணிப்பாளர்களுடன் கலந்துரையாடிவிட்டு உகன, பொத்துவில் கல்வி வலயங்களுக்கு அனுமதி வழங்குவதற்கான விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

06 மாதங்கள் கடந்தும்; உகன, பொத்துவில் கல்வி வலயங்களுக்கு அனுமதி இதுவரை கிடைக்கவில்லை.

இது தொடர்பாக கிழக்கு மாகாண மக்களின் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை என்ற மனநிலை மக்கள் மத்தியில் தற்போது உருவாகியுள்ளது.

கல்வி அமைச்சின் ஆலோசனைக் கூட்டத்தில், கல்வி அமைச்சின் செயலாளர்கள், உயர் அதிகாரிகள், கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் ஆகியோர் கலந்துகொண்டிருப்பதனால் இது தொடர்பான தீர்மானத்தினை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையினை பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை விடுத்தார்.

கல்வி அமைச்சின் செயலாளர், மேலதிக செயலாளர், திட்டமிடல் பணிப்பாளர் ஆகியோரிடம் உகன – பொத்துவில் பிரதேசங்களுக்கான தனியான கல்வி வலயங்கள் தொடர்பான விபரங்களை தெரிவிக்குமாறு பிரதமர் கேட்டுக்கொண்டார்.

கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் இது தொடர்பாக விளக்கம் அளிக்கையில்,

கிழக்கு மாகாண ஆளுநர், கல்வி அமைச்சின் சிபார்சுடன் உகன – பொத்துவில் கல்வி வலயங்களுக்கான விண்ணப்பம் கிடைத்தது எனவும் இந்த இரண்டு விண்ணப்பங்களுடன் சேர்த்து 23 புதிய கல்வி வலயங்களை உருவாக்குவதற்கான ஏற்பாடுகள் கல்வி அமைச்சினால் மேற்கொள்ளப்பட்டும் கல்வி அமைச்சினால் இதுவரையும் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை எனத் தெரிவித்தார்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை, கிழக்கு மாகாணத்தில் உகனப் பிரதேசம் சிங்கள மொழி கல்வி வலயமாகவும் பொத்துவில் பிரதேசம் தமிழ் மொழி கல்வி வலயமாகவும் அமைக்கப்படுவதற்கான அனுமதியினை கௌரவ பிரதம மந்திரி விசேடமாக பெற்றுத்தர வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

இது தொடர்பாக கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் , கல்விப் பணிப்பாளர் ஆகியோர் கூறுகையில், கிழக்கு மாகாணத்தில் உகன – பொத்துவில் பிரதேங்களுக்கான கல்வி வலயங்கள் மிக அவசியமானது எனவும் கடந்த 05 வருடங்களுக்கு முன்பு இதற்கான சிபார்சுகளை மத்திய கல்வி அமைச்சுக்கு கிழக்கு மாகாண ஆளுநரும் கிழக்கு மாகாண கல்வி அமைச்சும் வழங்கியுள்ளதாகவும் தெரிவித்தார்கள்.

உகன – பொத்துவில் பிரதேச கல்வி வலயங்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்குமாறு பிரதமர் கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர், திட்டமிடல் பணிப்பாளர் ஆகியோர்களுக்கு பணிப்புரைவிடுத்தார்.

-கே எ ஹமீட்

Related posts

புலமைப்பரிசில் பரீட்சை கேள்விகளை கசியவிட்ட இருவரும் விளக்கமறியலில்

editor

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரை சந்தித்த இ.தொ.காவின் முக்கியஸ்தர்கள்

editor

தனிமைப்படுத்தலை நிறைவு செய்த மேலும் 24 பேர் வெளியேறினர்