மன்னம்பிட்டி ஆயுர்வேத பிரதேசத்தில் அமைந்துள்ள ‘ஜீவமான் கிறிஸ்து தேவாலயம்’ என்ற புனித தலத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பியோடிய சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சந்தேக நபர் நேற்று (18) இரவு 7 மணியளவில் இந்த துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டிருந்தார்.
இது தொடர்பாக மன்னம்பிட்டி பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், குறித்த சந்தேக நபரை கைது செய்ய முடிந்துள்ளது.
அத்துடன், துப்பாக்கிச் சூட்டிற்கு பயன்படுத்தப்பட்ட இலங்கையில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியையும் பொலிஸார் தமது கட்டுப்பாட்டில் எடுத்துள்ளனர்.
38 வயதுடைய சந்தேக நபர் மன்னம்பிட்டி, பிரதான வீதியில் வசிப்பவர் ஆவார்.
இந்த துப்பாக்கிச் சூட்டினால் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்றாலும், தேவாலயத்தின் ஜன்னல் ஒன்றுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.
சந்தேக நபர் தேவாலயத்தின் நுழைவாயிலுக்கு அருகில் வந்து ஆராய்ந்து பார்த்துவிட்டு, மீண்டும் பாதைக்கு சென்று இந்த துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டு தப்பியோடியுள்ளார்.
தேவாலயத்தின் பாதிரியாருடன் ஏற்பட்ட தனிப்பட்ட முரண்பாடு காரணமாக இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக தற்போது மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மன்னம்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.