அரசியல்உள்நாடு

கிண்ணியாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு கொடுப்பனவு வழங்க இம்ரான் எம்.பி கோரிக்கை

அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக கிண்ணியா பிரதேசத்தில் பல வீடுகளுக்குள் நீர் புகுந்ததுடன், பாடசாலை செல்லும் பிள்ளைகளின் கற்றல் உபகரணங்கள் மற்றும் சீருடைகள் உள்ளிட்ட பொருட்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் கொள்வனவு செய்வதற்காக ரூபா 15,000 உதவித் தொகை வழங்கப்படும் என அரசாங்கம் அறிவித்திருந்த போதிலும், கிண்ணியாவின் பல பகுதிகளில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு இதுவரை அந்த உதவி வழங்கப்படவில்லை என பொதுமக்கள் பலர் தமது கவனத்திற்கு கொண்டுவந்துள்ளதாக இம்ரான் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் கிராம சேவகர்களிடம் வினவியபோது, மேலதிகாரிகளிடமிருந்து தெளிவான அனுமதி அல்லது உத்தரவு கிடைக்காத நிலையில், தங்களால் சுயமாக நடவடிக்கை எடுக்க முடியாது என அவர்கள் தெரிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, புதிய கல்வி ஆண்டு ஆரம்பிப்பதற்கு முன்னர் கிண்ணியா பிரதேசத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் பாடசாலை உபகரணங்கள் கொள்வனவு செய்வதற்கான ரூ.15,000 கொடுப்பனவை வழங்குவதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளும் வகையில், கிராம சேவகர்களுக்கு தெளிவான அனுமதி வழங்குமாறு கிண்ணியா பிரதேச செயலாளருக்கு கடிதம் மூலம் இம்ரான் MP கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், உரிய நடவடிக்கைகள் விரைவாக மேற்கொள்ளப்படுவதற்காக அந்தக் கடிதத்தின் பிரதியை மாவட்ட செயலாளருக்கும் அனுப்பியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

-மூதூர் நிருபர் முஹம்மது ஜிப்ரான்

Related posts

பெற்ற குழந்தையை மண்ணினுள் புதைத்த தாய் [VIDEO]

ஆர்.ஆர் இன் உடலுக்கு நீதிபதி இளஞ்செழியன், அமைச்சர் டக்ளஸ் உள்ளிட்டவர்கள் அஞ்சலி!

ரஞ்சனுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு [VIDEO]