உள்நாடுபிராந்தியம்

காவத்தை ஆதார வைத்திய சாலையில் ஐந்து மாடி கட்டிடத் தொகுதி திறந்து வைப்பு!

புதிதாக நிர்மாணிக்கப்பட்ட காவத்தை ஆதார வைத்தியசாலையின் ஐந்து மாடி வார்ட்டுத் தொகுதி இன்று (07) சபரகமுவ மாகாண ஆளுநர் சம்பா ஜானகி ராஜரத்ன தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.

சுமார் 308 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள மேற்படி ஐந்து மாடி வார்ட்டுத் தொகுதி, சுமார் 220 கட்டில்களைக் கொண்டுள்ளது.

இதில் உடலியல் நோய் பிரிவு, அறுவை சிகிச்சை பிரிவு, முன்கூட்டியே பிறந்த குழந்தைகளுக்கான பிரிவு, தாய்ப்பால் முகாமைத்துவ பிரிவு மற்றும் பிரசவத்தின் பின்னரான பராமரிப்பு பிரிவு உள்ளிட்ட பல சிகிச்சைப் பிரிவுகள் நிறுவப்படவுள்ளன.

பிரித்தானியர் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட காவத்தை ஆதார வைத்தியசாலை 1904 ஆம் ஆண்டு அரசாங்கத்தினால் பொறுப்பேற்கப்பட்டது.

பின்னர் 1998 ஆம் ஆண்டு இது ஆதார வைத்தியசாலையாக தரம் உயர்த்தப்பட்டது.

மேற்படி வைத்தியசாலையில் உள்ள பெரும்பாலான கட்டிடங்கள் மிகவும் பழமையானவையாகும்.
இதன் காரணமாக நோயாளர்களும் வைத்தியர்களும் எதிர்நோக்கி வந்த அசௌகரியங்களை நிவர்த்தி செய்யும் நோக்கிலே இந்த புதிய கட்டிடத் தொகுதியின் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

2020 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இதன் பணிகள், நிதி ஒதுக்கீடு இல்லாமையினால் பல வருடங்களாக இடைநிறுத்தப்பட்டிருந்தது.

சபரகமுவ மாகாண ஆளுநர் சம்பா ஜானகி ராஜரத்னவின் நேரடி தலையீட்டின் மூலம் மேற்படி வைத்தியசாலையின் அபிவிருத்திக்கு எஞ்சிய நிதிகள் விரைவாக வழங்கப்பட்டு, நிர்மாணப் பணிகள் பூர்த்தி செய்யப்பட்டு இன்று (07) மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது.

ஆளுநரின் இந்த நேரடி தலையீடு காரணமாக, 2029 ஆம் ஆண்டு திறக்கப்படவிருந்த இந்த ஐந்து மாடி கட்டிடத் தொகுதி 2026 ஆம் ஆண்டிலேயே மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வின் போது, அறிவியல் ஆய்வுக்காக ஜனாதிபதி விருது வென்ற வைத்தியர் ஓசத திஸாநாயக்க கௌரவிக்கப்பட்டார்.

அத்துடன் முதலுதவி பயிற்சி நெறியை வெற்றிகரமாக முடித்த அம்புலன்ஸ் சாரதிகளுக்கான சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான ஜனக சேனாரத்ன, நிலூஷா கமகே, கஹவத்தை பிரதேச சபைத் தலைவர் சாந்த குருகே, ஆளுநரின் ஒருங்கிணைப்பு செயலாளர் புஷ்பகுமார திசாநாயக்க, ஆளுநரின் பிரத்யேக செயலாளர் சமீர, சப்ரகமுவ மாகாண பிரதி பிரதம செயலாளர் (பொறியியல் சேவை) சாந்தனி புஷ்பகுமாரி, சப்ரகமுவ மாகாண சுகாதார அமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் ஷமேதானி மாதரஹேவகே, மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் கபில கன்னங்கர, இரத்தினபுரி மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அனோஜ் ருத்ரிகோ மற்றும் கஹவத்தை வைத்தியசாலை மருத்துவ அதிகாரி வைத்தியர் ஷாமிகா மாரந்தோட்ட உள்ளிட்ட பல முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டனர்.

-இரத்தினபுரி நிருபர் சிவா ஸ்ரீதரராவ்

Related posts

வெளிநாட்டு பணத்தில், 17 பில்லியன் டொலர்களை மறுசீரமைக்க அரசாங்கம் எதிர்பார்ப்பு

கிழக்கு மாகாணத்தில் சோலார் பேனல்களை நிறுவுவதற்கு – மின்சக்தி அமைச்சர் இணக்கம்!

யாழில் மீனவ அமைப்புகள் போராட்டம் – கடுமையான பாதுகாப்பு வழங்கிய பொலிஸார்

editor