ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்களின் முயற்சியினால், சுற்றுலா அபிவிருத்தி அமைச்சினால் ஒதுக்கீடு செய்யப்பட்ட சுமார் 10 மில்லியன் ரூபாய் நிதியின் கீழ் முதற்கட்ட வேலைத்திட்டமாக நிர்மாணிக்கப்பட்ட வாவிக்கரை பூங்கா மற்றும் அதனுடன் இணைந்த மிதக்கும் படகுகள் தொகுதி ஆகியவற்றை பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ் இன்று (12) நேரில் சென்று பார்வையிட்டார்.
அத்தோடு, குறித்த பூங்காவின் விஸ்தரிப்பு பணிகள் தொடர்பாகவும், 2026 ஆம் ஆண்டுக்காக விடுக்கப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில் ஒதுக்கப்படவுள்ள நிதியின் கீழ் மேற்கொள்ளப்படவுள்ள அடுத்தகட்ட வேலைத்திட்டங்களுக்கான முன்னாய்வுகள் தொடர்பாகவும் இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.
மேலும், 2026 ஆம் ஆண்டுக்கான சுற்றுலாத்துறை அமைச்சின் ஊடாக பாராளுமன்ற உறுப்பினர் விடுத்த கோரிக்கைகளுக்கு அமைவாக, சம்பந்தப்பட்ட வேலைத்திட்டங்களுக்கான நிதிகள் விரைவில் ஒதுக்கப்படவுள்ளதுடன், வாவிக்கரை வீதி மற்றும் அதனைச் சூழவுள்ள ஏனைய பிரதேசங்களின் அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கைகள் தொடர்புடைய அமைச்சின் ஊடாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
இந்நிகழ்வில், காத்தான்குடி நகர சபையின் பதில் தவிசாளர் எம்.ஐ.எம் ஜெஸீம், நகர சபை உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் நகர சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
-ஊடகப்பிரிவு
