காணாமல் போனவர்களின் உறவினர்களுக்கு நீதியை நிலைநாட்ட அமைக்கப்பட்ட காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் பாரிய அர்ப்பிணப்புடன் செயற்பட்டு வருகிறது.
என்றாலும் இந்த அலுவலகத்தினால் மாத்திரம் அதனை செய்ய முடியாது.
அதற்காக ஏனைய அரச நிறுவனங்கள், சிவில் அமைப்புகளின் உதவியும் தேவையாகும் என தேசிய ஒருமைப்பாடு பிரதி அமைச்சர் முனீர் முழப்பர் தெரிவித்தார்.
வலிந்துகாணாமலாக்கப்பட்டோரை நினைவுகூரும் சர்வதேச தினத்தை முன்னிட்டு வெள்ளிக்கிழமை (29) அலரிமாலிகையில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில்,
வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பான பிரச்சினை நீண்டகாலமாக தீர்க்கப்படாத ஒரு பிரச்சினையாக இருந்து வருகிறது.
இதில் பாதிக்கப்பட்ட உறவினர்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்க வேண்டும் என காணாமலாக்கப்பட்டோர் தொடர்பான அலுவகத்தில் பணியாற்றுகின்றவர்கள் மிகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றனர்.
என்றாலும் இந்த அலுலகத்தினால் மாத்திரம் பாதிக்கப்பட்டவர்களின் உறுவினர்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்க முடியாது.
இதற்காக ஏனைய அரச நிறுவனங்கள், சிவில் அமைப்பினர், மதத் தலைவர்கள் என அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்பு எமக்கு தேவையாகும்.
இவ்வாறானதொரு நிலை மீண்டும் எதிர்காலத்தில் ஏற்படக்கூடாது என்பதில், பொறுப்புள்ள அரசாங்கம் என்றவகையில் நாங்கள் அதுதொடர்பில் அவதானமாக இருக்கிறோம்.
குடும்பத்தில் ஆண் பிள்ளை ஒருவர் இந்த நிலைக்கு ஆளாக்கப்பட்டால், அந்த குடும்பம் எந்தளவு பாதிக்கப்படும் என்பது தொடர்பாகவும் எமது அரசாங்கம் தேடிப்பார்த்து, அந்த குடும்பங்களின் எதிர்காலத்துக்காக எங்களால் செய்ய முடியுமான விடயங்களை செய்வதற்கு நடவடிக்கை எடுப்போம்.
அதேநேரம் இந்த சம்பவம் தொடர்பில் ஊடங்கள் எங்களுடன் கலந்துரையாடி தகவல்களை வெளிப்படுத்தும்போது, இதனை உணர்வுபூர்வமான விடயமாக கருதி, செயற்பட வேண்டும். மாறாக குறுகிய அரசியல் நோக்கில் இந்த விடயம் தொடபில் செயற்படக்கூடாது.
அதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்க அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட முன்வர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்றார்.
-எம்.ஆர்.எம்.வசீம்