காசா மீது இஸ்ரேல் நடத்திய தொடர்ச்சியான தாக்குதல்களில் சுமார் 104 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக, காசாவில் இயங்கும் ஹமாஸ் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் மத்தியஸ்தத்துடன் ஏற்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தத்தை ஹமாஸ் மீறியதற்குப் பதிலடியாக “பயங்கரவாத இலக்குகள் மற்றும் பயங்கரவாதிகளை” தாக்கியதாக இஸ்ரேலிய இராணுவம் கூறியுள்ளது.
காசாவில் ஒரு இஸ்ரேலிய சிப்பாயைக் கொலை செய்தமை மற்றும் இறந்த பணயக்கைதிகளின் சடலங்களைத் திரும்ப ஒப்படைக்கும் நிபந்தனைகளை ஹமாஸ் மீறியதாகவும் இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்தத் தாக்குதலுடன் தமக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்றும், ஒப்பந்தத்திற்குத் தாம் கடமைப்பட்டிருப்பதாகவும் ஹமாஸ் தெரிவித்தது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், போர்நிறுத்தத்திற்கு எதுவும் ஆபத்தை ஏற்படுத்தாது என்று வலியுறுத்தியதுடன், இஸ்ரேலிய வீரர்கள் குறிவைக்கப்பட்டால் இஸ்ரேல் பதிலடி கொடுக்க வேண்டும் என்றும் கூறினார்.
இஸ்ரேலியத் தாக்குதல்கள் காசா நகர் மற்றும் வடக்கில் உள்ள பெய்ட் லஹியா மத்தியிலுள்ள புரேய்ஜ் மற்றும் நுசைராட், தெற்கிலுள்ள கான் யூனிஸ் ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகள், பாடசாலைகள் மற்றும் குடியிருப்புத் தொகுதிகளைத் தாக்கியுள்ளன.
காசா நகரில் பல குடியிருப்புப் பகுதிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதால் அங்கு பாரிய புகை எழுவதை அவதானிக்க முடிந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
காசா சுகாதார அமைச்சு மொத்தம் 104 பேர் கொல்லப்பட்டதாகவும், அவர்களில் 46 குழந்தைகளும் 20 பெண்களும் அடங்குவதாக அறிவித்துள்ளது.
இந்த தாக்குதலில் 250க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
