உலகம்

காசா போரின் இரண்டு ஆண்டுகள் நிறைவு – உக்கிர தாக்குதல்களை நடத்தி வரும் இஸ்ரேல் – போர் நிறுத்தப் பேச்சு எகிப்தில் தொடர்ந்து நீடிப்பு

காசா போருக்கு இரண்டு ஆண்டுகள் எட்டிய நிலையில் இஸ்ரேலிய டாங்கிகள், போர் விமானங்கள் மற்றும் தாக்குதல் படகுகள் நேற்று (07) அங்கு சரமாரி தாக்குதல்களை முன்னெடுத்ததோடு போரை முடிவுக்குக் கொண்டுவரும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் திட்டத்தின்படி எகிப்தில் பேச்சுவார்த்தை நீடித்து வருகிறது.

ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் தரப்புகள் நேற்று முன்தினம் மறைமுக பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்தபோதும் போர் நிறுத்தம் ஒன்று இன்னும் எட்டப்படாத சூழலில் இஸ்ரேல் உக்கிர தாக்குதல்களை நடத்தி வருவதாக குடியிருப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

எகிப்தின் ஷாம் அல் ஷெய்க்கில் இடம்பெற்று வரும் பேச்சுவார்த்தைகளில் ஹமாஸ் அமைப்பு ஆயுதங்களை களைவது மற்றும் காசாவில் இருந்து இஸ்ரேலிய படை வாபஸ் பெறுவது போன்ற சவாலான விடயங்கள் தொடர்பிலும் இணக்கப்பாடு ஒன்றை எட்ட வேண்டிய நிர்ப்பந்தம் உள்ளது.

எனினும் டிரம்ப் முன்வைத்திருக்கும் 20 அம்ச போர் நிறுத்தத் திட்டம் இதுவரை இல்லாத அளவுக்கு போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

கடந்த 2023 ஒக்டோபர் 7 ஆம் திகதி பலஸ்தீன போராளிகள் இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் பலர் கொல்லப்பட்டு 250 பேர் வரை பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்தே காசா போர் வெடித்தது.

அது தொடக்கம் ஒரு சில வாரங்கள் நீடித்த தற்காலிக போர் நிறுத்தம் தவிர்த்து இஸ்ரேலின் சரமாரித் தாக்குதல்கள் நீடிப்பதோடு காசாவில் பஞ்ச நெருக்கடி ஏற்பட்டு பாரிய மனிதாபிமான அவலம் ஒன்று உருவாகியுள்ளது.

காசா நகர் தற்போது இடிபாடுகளாக மாற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தெற்கு காசாவின் கான் யூனிஸ் நகர் மற்றும் வடக்கே காசா நகரில் கடும் தாக்குதல்கள் இடம்பெற்றதாக குடியிருப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நேற்று அதிகாலை தொடக்கம், தரை, வான் மற்றும் கடல் வழியாக தாக்குதல்கள் இடம்பெற்றதாக குடியிருப்பாளர்களை மேற்கோள்காட்டி ரோய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

மறுபுறம் காசா போராளிகள் இஸ்ரேலை நோக்கி நேற்றுக் காலை ரொக்கெட் குண்டுகளை வீசியதோடு இஸ்ரேலின் ஹசாரா பகுதியில் சைரன் ஒலி எழுப்பப்பட்டுள்ளது.

காசாவுக்குள் இஸ்ரேலியப் படை துப்பாக்கிதாரிகளை முறியடிப்பதற்கு தொடர்ந்து செயற்படுவதாக இஸ்ரேல் இராணுவம் குறிப்பிட்டுள்ளது.

பலஸ்தீன போராளிகளின் தாக்குதலின் ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், ஹமாஸ், இஸ்லாமிய ஜிஹாத் மற்றும் சிறிய போராட்டக் குழுக்கள் உள்ளிட்ட பாலஸ்தீனிய பிரிவுகளின் ஒரு கூட்டமைப்பு, ‘எதிர்ப்பை முன்னெடுப்பதே சியோனிச எதிரியை எதிர்கொள்வதற்கான ஒரே வழி’ என்று உறுதிபூண்டுள்ளது.

‘பலஸ்தீன மக்களின் ஆயுதங்களை களைவதற்கு எவருக்கும் உரிமை இல்லை. பலஸ்தீன மக்களின் நிலம் மற்றும் அவர்களின் புனிதத் தலங்கள் விடுவிக்கப்படும் வரை இந்த சட்டபூர்வமான ஆயுதம் பலஸ்தீன் தலைமுறைகளுக்கு கடத்தப்படும்’ என்று பலஸ்தீன எதிர்ப்பு போராட்ட தரப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.

ஹமாஸ் தாக்குதலின் ஆண்டு நிறைவை இஸ்ரேல் நேற்று, (07) அனுஷ்டித்தது.

இதில் 364 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட நொவா இசை நிகழ்ச்சி நடந்த இடம் உட்பட பல இடங்களிலும் மக்கள் திரண்டு உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்தனர்.

காசாவைச் சேர்ந்த 49 வயது முஹமது டிப், போர் முடிவுக்கு வருவது குறித்து நம்பிக்கையை வெளியிட்டிருந்தார்.

‘நாம் அச்சம், பயங்கரம், இடம்பெயர்வு மற்றும் அழிவுக்கு மத்தியில் வாழ ஆரம்பித்து இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டது’ என்று அவர் ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார்.

இந்தப் போர் ஆரம்பித்தது தொடக்கம் காசாவில் 67,000 இற்கும் அதிகமான பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டிருப்பதோடு, இதில் சுமார் மூன்றில் ஒரு பங்கினர் 18 வயதுக்கு உட்பட்டவர்களாவர்.

இந்நிலையில் டிரம்பின் போர் நிறுத்தத் திட்டத்தின் அடிப்படை நோக்கத்திற்கு இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் தரப்புகள் ஆதரவை வெளியிட்டுள்ளன.

இதில் போரை நிறுத்துவது பலஸ்தீன கைதிகளுக்கு பதில் எஞ்சியுள்ள கைதிகளை விடுவிப்பது காசாவுக்கு உதவிகள் செல்வது அடிப்படை நோக்கங்களாக உள்ளன.

இந்த போர் நிறுத்தத் திட்டத்திற்கு அரபு மற்றும் மேற்குலக நாடுகள் ஆதரவை வெளியிட்டுள்ளன.

இறுதி உடன்படிக்கை ஒன்றை நோக்கி பேச்சுவார்த்தைகள் சுமுகமாக இடம்பெறுவதாக டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

எகிப்து பேச்சுவார்த்தை மூலம் உடன்படிக்கை ஒன்று எட்டப்பட்டாலும் காசாவை நிர்வகிப்பது மற்றும் அந்தப் பகுதியை மீளக்கட்டியமைப்பது போன்ற கேள்விகளுக்கும் பதில் காண வேண்டி ஏற்பட்டுள்ளது.

காசாவில் ஹமாஸின் எதிர்கால செயற்பாடுகளை டிரம்ப் மற்றும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நிராகரித்துள்ளனர்.

பேச்சுவார்த்தையில் பங்கேற்றிருக்கும் ஹமாஸ் தரப்பு, காசாவில் இருந்து இஸ்ரேல் வாபஸ் பெறுவதற்கான தெளிவான காலம் மற்றும் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான உத்தரவாதத்தை கோரி இருப்பதாக நெருக்கமான வட்டாரங்களை மேற்கோள்காட்டி செய்தி வெளியாகியுள்ளது.

கடந்த திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்ட இந்த பேச்சுவார்த்தைக்கு இன்னும் சில காலங்கள் தேவைப்படும் என்று அது தொடர்பிலான உத்தியோகபூர் அறிவிப்பு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

அமெரிக்காவில் கொரோனா தொற்றால் 10 இலட்சம் பேர் பாதிப்பு

இஸ்ரேலுடனான அனைத்து வர்த்தக உறவுகளையும் துருக்கி நிறுத்தியுள்ளது!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு இல்லையாம்

editor