உலகம்

காசாவில் போர் நிறுத்த பேச்சுவார்த்தை – ஹமாஸ் அமைப்பு கோரி இருக்கும் மாற்றங்கள் ஏற்க முடியாது – இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு

காசாவில் போர் நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகளை விடுவிப்பதற்கான பேச்சுவார்த்தைக்கு இஸ்ரேல் தனது பிரதிநிதிகளை கட்டாருக்கு அனுப்புவதாக அறிவித்தபோதும் போர் நிறுத்த முன்மொழிவு தொடர்பில் ஹமாஸ் அமைப்பு கோரி இருக்கும் மாற்றங்கள் ஏற்க முடியாதவை என்று இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு குறிப்பிட்டுள்ளார்.

காசாவில் 22 மாதங்களாக நீடிக்கும் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு முயற்சிகள் தீவிரம் அடைந்தபோது அங்கு இஸ்ரேல் தனது தாக்குதல்களை தொடர்ந்து தீவிரமாக நடத்தி வரும் நிலையில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 57,000 ஐ தாண்டி அதிகரித்துள்ளது. போர் நிறுத்தம் ஒன்றுக்கு அழைப்பு விடுத்து வரும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பை நெதன்யாகு இன்று (07) வெள்ளை மாளிகையில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

இந்நிலையில் போர் நிறுத்தம் ஒன்றுக்கு இஸ்ரேல் மீது அழுத்தங்கள் அதிகரித்துள்ளன. கடந்த சனிக்கிழமையும் இஸ்ரேலின் டெல் அவிவி நகரில் திரண்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் பணயக்கைதிகளை விடுவிக்கக் கோரி பேரணி நடத்தி இருந்தனர்.

அனைவரையும் பாதுகாக்கக் கூடிய உடன்படிக்கை ஒன்று எட்டப்பட வேண்டும் என்று அந்த பேரணியில் பங்கேற்ற கலி மற்றும் செவி பெர்மன் ஆகிய பணயக்கைதிகளில் சித்தியான மகாபில் மாயெர் என்பவர் ஏ.எப்.பி. செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார்.

அவசரமான மற்றும் தீவிரமான பேச்சுவார்த்தையில் ஈடுபடத் தயார் என்று ஹமாஸ் அமைப்பு கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்திருந்தது. அமெரிக்க ஆதரவில் முன்வைக்கப்பட்ட போர் நிறுத்த முன்மொழிவுக்கு சாதகமான பதிலை அளித்திருப்பதாகவும் அந்த அமைப்பு கூறியது.

எனினும் நெதன்யாகு அலுவலகம் வெளியிட்ட அறிவிப்பில், ‘கட்டார் முன்மொழிவில் மாற்றங்கள் செய்வதற்கு விடுத்திருக்கு ஹமாஸின் கோரிக்கை இஸ்ரேலால் ஏற்க முடியாதது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும் இஸ்ரேல் இணங்கிய முன்மொழிவு குறித்து பேசுவதற்கு கட்டாருக்கு பிரதிநிதிகளை அனுப்புவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

60 நாள் போர் நிறுத்தம் ஒன்றை உறுதி செய்வதற்கு அவசியமான நிபந்தனைகளுக்கு இஸ்ரேல் இணங்கி இருப்பதாக டொனால் டிரம்ப் ஒருசில நாட்களுக்கு முன்னர் குறிப்பிட்டிருந்தார். இந்த முன்மொழிவு கட்டார் மற்றும் எகிப்து மத்தியஸ்தர்கள் ஊடாக ஹமாஸ் அமைப்புக்கு அளிக்கப்பட்டது. எவ்வாறாயினும் இந்த போர் நிறுத்த முன்மொழிவு தொடர்பில் ஹமாஸ் அளித்திருக்கும் பதில் பற்றிய விபரம் வெளியாகவில்லை.

இந்த 60 நாள் போர் நிறுத்தத்தில் ஹமாஸ் அமைப்பு உயிருடன் உள்ள 10 பணயக்கைதிகள் மற்றும் சில பணயக்கைதிகளின் சடலங்களை விடுவிப்பதற்கும் அதற்கு பகரமாக இஸ்ரேல் பலஸ்தீன கைதிகளை விடுவிப்பதற்கு பரிந்துரைத்திருப்பதாக இரு பலஸ்தீன வட்டாரங்களை மேற்கோள்காட்டி ஏ.எப்.பி. செய்தி வெளியிட்டுள்ளது.

காசாவில் 251 இஸ்ரேலியர்கள் பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்ட நிலையில் தொடர்ந்து 49 பேர் எஞ்சி இருப்பதாகவும் அவர்களில் 27 உயிரிழந்திருப்பதாகவும் இஸ்ரேல் இராணுவம் குறிப்பிட்டுள்ளது.

எவ்வாறாயினும் இஸ்ரேலியப் படை காசாவில் இருந்து வாபஸ் பெறுவது குறித்தும், பேச்சுவார்த்தைகளின்போது மீண்டும் மோதல் ஆரம்பிப்பதற்கு எதிரான உத்தரவாதங்கள் மற்றும் காசாவில் ஐ.நா. தலைமையிலான உதவி விநியோக அமைப்பை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பிலும் ஹமாஸ் அமைப்பு சில நிபந்தனைகளை விதித்திருப்பதாக கூறப்படுகிறது.

இஸ்ரேல் மீது 2023 ஒக்டோபரில் பலஸ்தீன போராளிகள் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து வெடித்த காசா போரில் இதுவரை மத்தியஸ்தர்களின் முயற்சியால் இரு தடவைகள் போர் நிறுத்தம் கடைப்பிடிக்கப்பட்டது. கடைசியாக கடந்த மார்ச்சில் முறிவடைந்த போர் நிறுத்தத்தைத் தொடர்ந்து பேச்சுவார்த்தைகளில் இழுபறி நீடித்து வருகிறது.

மறுபுறம் இஸ்ரேலின் தாக்குதல்கள் தீவிரம் அடைந்திருக்கும் நிலையில் நேற்றுக் காலை தொடக்கம் இடம்பெற்ற தாக்குதல்களில் மேலும் 32 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டிருப்பதாக காசா மருத்துவ வட்டாரம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக கடந்த 24 மணி நேரத்தில் 80 பேர் கொல்லப்பட்டு மேலும் 304 பேர் காயமடைந்திருப்பதாக காசா சுகாதார அமைச்சு நேற்று வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காசா நகரில் உள்ள இரு வீடுகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் இருபது பேர் கொல்லப்பட்டிருப்பதோடு மேலும் 25 பேர் காயமடைந்திருப்பதாக அங்குள்ள ஷிபா வைத்தியசாலை பணிப்பாளர் முஹமது அபூ செல்மியா குறிப்பிட்டுள்ளார்.

தெற்கு காசாவின் மவாசியில் இடம்பெற்ற தாக்குதல்களில் 13 பலஸ்தீனர்கள் பலியாகியுள்ளனர். மவாசியில் இடம்பெயர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் கூடாரங்களில் அடைக்கலம் பெற்றிருக்கும் நிலையில் அந்தப் பகுதி இஸ்ரேலியப் படையினரால் அடிக்கடி இலக்காகி வருகிறது.

இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் கொல்லப்பட்டிருப்பதாக அருகில் இருக்கும் நாசர் வைத்தியசாலை தெரிவித்துள்ளது.

காசாவில் இஸ்ரேல் தொடர்ந்து நடத்தும் தாக்குதல்களில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 57,418 ஆக அதிகரித்திருப்பதாக காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள் மற்றும் சிறுவர்களாவர்.

காசாவின் ஒட்டுமொத்த மக்களும் தமது சொந்த வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டு, இஸ்ரேல் அங்கு உதவிகள் செல்லாமல் முடக்கி இருக்கும் சூழலில் பாரிய மனிதாபிமான நெருக்கடி ஒன்றும் உருவாகியுள்ளது.

மறுபுறம் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் ஆதரவில் அங்கு முன்னெடுக்கப்படும் உதவி விநியோகங்களை பெறுவதற்கு ஒன்றுகூடும் ஆயிரக்கணக்கான மக்கள் மீது தொடர்ந்து தாக்குதல்கள் இடம்பெற்று வரும் நிலையில் அவ்வாறான தாக்குதல்களில் இதுவரை குறைந்தது 743 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டிருப்பதாக காசா சுகாதார அமைச்சு கடந்த சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

கொரோனா தடுப்பூசியை பயன்படுத்த ரஷ்யா கட்டுப்பாடு

பனிச்சரிவில் சிக்கி 38 பேர் உயிரிழப்பு

ஈரானில் பாரிய வெடிப்பு – 80 பேர் காயம்

editor