உலகம்

காசாவில் போர் நிறுத்தத்தை மீறி தாக்குதல்கள் தொடர்கிறது – ஹமாஸ் அமைப்புக்கு இஸ்ரேல் கடும் எச்சரிக்கை

காசாவில் பலவீனமாக போர் நிறுத்தம் ஒன்று அமுலில் இருந்தபோதும் போர் நிறுத்தத்தை மீறி இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடர்வதோடு போர் நிறுத்ததிற்கு மத்தியிலும் காசாவில் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

காசாவுக்கு உதவி வாகனங்கள் செல்ல ஆரம்பித்திருப்பதோடு ஹமாஸின் பிடியில் இருக்கும் உயிரிழந்த பணயக்கைதிகள் தொடர்பான சர்ச்சைகள் எழுந்தபோது காசாவில் எகிப்துடனான எல்லைக் கடவையை திறப்பதற்கான ஏற்பாடுகளை இஸ்ரேல் ஆரம்பித்துள்ளது.

ஹமாஸ் அமைப்பு பணயக்கைதிகளின் சடலங்களை மிகவும் மந்தமாக விடுவித்து வருவதாக குற்றம்சாட்டும் இஸ்ரேல் ரபா எல்லைக் கடவையை தொடர்ந்து மூடி வைப்பது மற்றும் காசாவுக்கான உதவி விநியோகங்களை குறைப்பது குறித்து எச்சரித்து வருகிறது.

காசாவில் இரண்டு ஆண்டு போருக்குப் பின்னர் கடந்த வாரம் அமுலுக்கு வந்த போர் நிறுத்தத்தைத் தொடந்து அங்கிருந்து அனைத்து உயிருடன் இருக்கும் இஸ்ரேலிய பணயக்கைதிகளும் விடுவிக்கப்பட்டதோடு அதற்கு பகரமாக இஸ்ரேலிய சிறைகளில் இருந்து பலஸ்தீன கைதிகள் மற்றும் தடுத்து வைக்கப்பட்டவர்கள் என நூற்றுக்கணக்கான பலஸ்தீனர்களை இஸ்ரேல் விடுவித்தது.

இந்நிலையில் மரணித்த பணயக்கைதிகளின் உடல்களை ஹமாஸ் போராளிகள் படிப்படியாகவே விடுவித்து வருகின்றனர்.

இதன்படி கடந்த திங்கட்கிழமை நான்கு சடலங்களை விடுவித்த ஹமாஸ் மேலும் நான்கு சடலங்களை செவ்வாய்க்கிழமை மாலை விடுவித்தது.

எனினும் அதில் ஒரு உடல் பணயக்கைதியுடையது அல்ல என்று இஸ்ரேல் குறிப்பிட்டுள்ளது.

சடலங்களை விடுவிப்பதில் ஏற்பட்டிருக்கும் குழப்பம் போர் நிறுத்த உடன்படிக்கையிலேயே சிக்கலை ஏற்படுத்துவதாக மாறியுள்ளது. போர் நிறுத்தத்தின் முக்கிய விடயங்கள் தொடர்பில் இன்னும் தீர்வு காணப்படாத சூழலிலேயே இந்தக் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

இந்தப் போர் நிறுதத்தில் ஹமாஸ் அமைப்பு ஆயுதங்களை களைவது மற்றும் அதிகாரத்தை கைவிடுவது போன்ற முன்மொழிவுகள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டி உள்ளது. எனினும் ஆயுதத்தை கைவிடுவதை ஹமாஸ் தொடர்ந்து நிராகரித்து வருகிறது.

காசாவில் போட்டி ஆயுதக் குழுக்களுக்கு எதிரான சுற்றிவளைப்புகளை நடத்தி வரும் ஹமாஸ் போராளிகள் அங்கு தனது அதிகாரத்தை பலப்படுத்தி வருகின்றனர்.

காசா போர் நிறுத்தத்தின் நீண்ட கால திட்டங்களில் காசாவை நிர்வகிப்பது தொடர்பான அம்சமும் உள்ளடங்குகிறது.

இதன்போது காசா நிர்வாகத்தை சர்வதேச அமைப்பு ஒன்று ஏற்பது மற்றும் பலஸ்தீன நாடு ஒன்றை உருவாக்குதற்கு வழிவகுப்பது போன்ற விடயங்களும் இதில் அடங்கும்.

காசாவில் இன்னும் 21 பணயக்கைதிகளின் உடல்கள் இருப்பதோடு அவற்றில் சில இன்னும் மீட்கப்படாத நிலையில் உள்ளன. காசாவில் ஏற்பட்டிருக்கும் அழிவுகள் அந்த உடல்களை மீட்பதில் பெரும் சவாலை உருவாக்கியுள்ளது.

இந்த போர் நிறுத்த உடன்படிக்கையின்படி இஸ்ரேல் 360 பலஸ்தீனர்களின் உடல்களை திரும்ப அளிக்க வேண்டும்.

இதன் முதல் கட்டமாக 45 சடலங்கள் கடந்த செவ்வாய்க்கிழமை கையளிக்கப்பட்டன. அந்த உடல்கள் அடையாளம் காணப்பட்டதாக பலஸ்தீன சுகாதார நிர்வாகம் குறிப்பிட்டது.

இந்தப் போர் காசாவில் பாரிய மனிதாபிமான நெருக்கடியை உருவாக்கியுள்ளது. கிட்டத்தட்ட அனைவரும் போல் தமது இருப்பிடம் உட்பட வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.

காசாவில் பஞ்சம் நிலவுவதாக பஞ்சம் தொடர்பில் கண்காணிக்கும் சர்வதேச அமைப்புகள் அறிவித்துள்ளன.

‘எமது நிலைமை படுமோசமாக உள்ளது. தூபா பகுதியில் நாம் எமது வீட்டுக்குச் சென்றோம் ஆனால் அங்கே வீடுகள் எதுவும் இருக்கவில்லை.

தற்காலிக முகாம்கள் கூட இல்லை’ என்று காச நகர வாசியான மெயீமன் ஹசனைன் ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார்.

காசாவுடனான ரபா எல்லையை நோக்கி உதவி வாகனங்கள் சென்றிருப்பதாக எகிப்து தெரிவித்துள்ளது.

இதில் சில வாகனங்கள் எரிபொருளை நிரப்பியதாகவும் மற்றவை உதவிப் பொருட்களை சுமந்ததாகவும் சென்றிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் இந்த உதவி வாகனங்கள் எல்லை கடந்து சென்றிருப்பது உறுதி செய்யப்படவில்லை. போர் நிறுத்த உடன்படிக்கையின்படி நாளுக்கு 600 உதவி வாகனங்கள் காசாவுக்கு செல்ல வேண்டி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

போர் நிறுத்தம் அமுலில் இருந்தபோதும் காசாவில் இஸ்ரேலின் தாக்குதல்கள் நேற்றும் இடம்பெற்றிருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

தெற்கு நகரான கான் யூனிஸின் கிழக்கு பக்கமாக இருக்கும் பனி சுஹைல் மற்றும் ஷெய்க் நாசர் பகுதிகளில் குடியிருப்பாளர்களை நோக்கி இஸ்ரேலியப் படை செல் குண்டுகளை வீசியுள்ளது.

போர் நிறுத்த உடன்படிக்கையின்படி காசாவின் பிரதான நகரங்களுக்கு வெளியே மஞ்சள் கோடு என்ற எல்லை வரை இஸ்ரேலிய படைகள் வாபஸ் பெற்றுள்ளன.

இந்த எல்லைக் கோட்டை மீறும் பட்சத்தில் உடன் நடவடிக்கை எடுப்பதாக இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

அண்மையில் மீட்கப்பட்ட 33 உடல்கள் உட்பட கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் மொத்தம் 44 சடலங்கள் மீட்கப்பட்டதாகவும் 29 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் காசாவில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 67,913 ஆக அதிகரித்திருப்பதோடு மேலும் 170,134 பேர் காயமடைந்துள்ளனர்.

காசாவில் இடிபாடுகளில் சிக்கிய நிலையிலும் வீதிகளில் சிதறுண்டும் ஆயிரக்கணக்கான உடல்கள் இருப்பதாக நம்பப்படுகிறது.

Related posts

பெண்களின் லட்சியங்களுக்கு எல்லை இருக்கக்கூடாது – ரேச்சல் ரீவ்ஸ்.

நியூஸிலாந்தில் நிலநடுக்கம்

editor

நரேந்திர மோடியின் டுவிட்டர் கணக்கு முடக்கம்