இலங்கை அரசாங்கத்திற்கும் ஐக்கிய நாடுகள் சபைக்கும் இடையிலான தொடர்ச்சியான கூட்டாண்மையை மேம்படுத்துவதற்காக, இலங்கைப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, இலங்கையில் உள்ள ஐ.நா. வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆண்ட்ரே ஃபிரான்ச் அவர்களை இன்று (22) பாராளுமன்றத்தில் சந்தித்தார்.
சமூகப் பாதுகாப்பு, சுகாதாரப் பராமரிப்பு மற்றும் நல்லிணக்கம் போன்ற முக்கிய துறைகளில் இலங்கையின் முன்னுரிமைகளை ஆதரிப்பதற்கான ஐ.நா.வின் தொடர்ச்சியான ஆதரவை திரு. ஃபிரான்ச் மீண்டும் வலியுறுத்தினார்.
2025 ஜூன் மாதம் நடைபெறவிருக்கும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் உயர் ஸ்தானிகரின் உத்தியோகபூர்வ விஜயம் குறித்தும் அவர் பிரதமரிடம் தெரிவித்தார்.
இலங்கை முழுவதும் உள்ள அனைத்து சமூகங்களின் உண்மையான தேவைகள் மற்றும் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யும் ஒரு நல்லிணக்க செயல்முறையை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை பிரதமர் வலியுறுத்தினார்.
காசா பகுதியில் நாளுக்கு நாள் மோசமடைந்து வரும் மனிதாபிமான நிலைமை குறித்து பிரதமர் கவலை தெரிவித்ததுடன், பாலஸ்தீன மக்களுடனான சர்வதேச ஈடுபாடு மற்றும் ஒருமைப்பாட்டை அதிகரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இந்த சந்திப்பில் ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி மற்றும் அபிவிருத்தி ஆலோசகர் நெத்மினி மெதவல மற்றும் கொழும்பில் உள்ள ஐ.நா அலுவலகத்தின் தலைவர் அன்ட்ரியாஸ் கற்பதி ஆகியோரும் கலந்துகொண்டனர்.
இலங்கை அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி, பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, பிரதமரின் மேலதிக செயலாளர் சாகரிகா போகஹவத்த, ஐக்கிய நாடுகள் சபை மற்றும் வெளியுறவு அமைச்சின் மனித உரிமைகள் பிரிவின் பணிப்பாளர் நாயகம். தயானி மெண்டிஸ் ஆகியோர் பங்கேற்றனர்.
-பிரதமர் ஊடகப் பிரிவு