உலகம்விசேட செய்திகள்

காசாவில் உதவி லொறிகள் கவிழ்ந்து விபத்து – 20 பேர் பலி

காசாவில் இஸ்ரேலின் தாக்குதல்களில் மேலும் பலர் கொல்லப்பட்டு பட்டினியால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 200ஐ நெருங்கி இருக்கும் நிலையில் உதவிகளை பெற கூடியவர்கள் மீது உதவி லொறிகள் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில் 20 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

மத்திய காசாவில் கடந்த செவ்வாய்க்கிழமை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நூற்றுக்காணக்கான மக்கள் உதவிக்காக காத்திருந்தபோது அங்கு வந்த உதவி லொறிகள் அவர்கள் மீது கவிழ்ந்ததாக காசா சிவில் பாதுகாப்பு நிறுவனத்தின் பேச்சாளர் மஹ்மூத் பசல் ஏ.எப்.பி. செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதியில் இது நடந்திருப்பதாகவும் வீதிகள் கரடுமுரடான மற்றும் ஆபாயகரமானதாக இருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதற்போது நான்கு லொறிகள் கவிழ்ந்திருப்பதோடு மேலும் 30 பேர் வரை காயமடைந்துள்ளனர்.

உதவி வாகனங்களை நோக்கி வந்த மக்கள் அதன் மேல் கூட்டமாக ஏறியதால் அந்த வானங்கள் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்துள்ளன.

காசாவில் தனியார் போக்குவரத்து சங்கம் சார்பில் பேசவல்ல ஜிஹாத் இஸ்லைன் கூறியதாவது, கடந்த செவ்வாய்க்கிழமை 26 வர்த்தக லொறிகள் காசாவுக்குள் நுழைந்ததாகவும் அதில் 20 லொறிகள் பாதுகாப்பாக பயணத்தை பூர்த்தி செய்தபோதும் ஆறு லொறிகள் சூறையாடப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

இவற்றில் நான்கு லொறிகள் கவிழ்ந்த நிலையில் 10 ஓட்டுநர்களுக்கும் காயம் ஏற்பட்டதாக தெரிவித்துள்ளார்.

நுஸைரத் அகதி முகாமுக்கு அருகே நடந்த இந்த சம்பவத்தில் லொறி வண்டி ஓட்டுநர்கள் இஸ்ரேல் முன்னர் குண்டு வீசிய பாதுகாப்பற்ற வீதியில் வாகனங்களை செலுத்தி இருப்பதாக பசல் சுட்டிக்காட்டியுள்ளார்.

உதவி விநியோக நிலையங்களை அடைவதற்கான வாகனங்களை இஸ்ரேல் வலுக்கட்டாயமான ஆபத்தான வழிகளில் அனுப்புவதாக ஹமாஸ் அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.

‘அடிப்படை தேவைகளுக்காக பல வாரங்களாக காத்திருக்கும் பட்டினியில் உள்ள பொதுமக்கள் கூடியுள்ள வீதிகள் வழியாக செல்வதற்கு ஓட்டுநர்களை இஸ்ரேலியப் படை கட்டாயப்படுத்துகிறது’ என்று ஹமாஸ் அமைப்பு வெளியிட்டிருக்கும் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது அடிக்கடி மக்கள் உதவி லொறிகளை சூழ்ந்துகொள்வதற்கு காரணமாகியுள்ளது என்று அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

காசாவில் ஏற்கனவே அமெரிக்க ஆதரவில் முன்னெடுக்கப்படும் காசா மனிதாபிமான நிறுவனத்தின் உதவி மையங்களில் கூடும் பலஸ்தீனர்கள் மீது இஸ்ரேலியப் படை தொடர்ச்சியாக தாக்குதல்களை நடத்தி வருகிறது.

இந்நிலையில் காசா மனிதாபிமான நிறுவனம் சர்வதேச சட்டங்களை தீவிரமாக மீறுவதாக குற்றம்சாட்டிய ஐ.நா. மனிதாபிமான நிபுணர்கள், அந்த நிறுவனத்தை உடன் கலைக்கும்படி அழைப்பு விடுத்துள்ளனர்.

‘காசாவில் உதவிகளை விநியோகிப்பதற்கு அமெரிக்காவின் ஆதரவுடன் 2025 பெப்ரவரியில் இஸ்ரேலால் உருவாக்கப்பட்ட அரச சார்பற்ற அமைப்பு ஒன்றான காசா மனிதாபிமான நிறுவனம், மனிதாபிமான நிவாரணம் எவ்வாறு இரகசிய இராணுவ மற்றும் அரசியல் நிகழ்ச்சி நிரல்களுக்குப் பயன்படுத்தப்படலாம் என்பதற்கு மிக மோசமான உதாரணம் உள்ளது’ என்று இருபத்து ஐந்து சுதந்திர ஐ.நா. மனித உரிமைகள் நிபுணர்கள் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த மே 27 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்த உதவி விநியோக இடங்களில் உதவிக்காக ஒன்றுகூடும் பலஸ்தீனர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு, ஆளில்லா விமானம் மற்றும் பீரங்கி தாக்குதல்களில் இதுவரை 1,655 பேர் கொல்லப்பட்டு மேலும் 11,800 பேர் காயமடைந்திருப்பதாக காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

காசாவுக்கான உதவிகளை இஸ்ரேல் முழுமையாக கட்டுப்படுத்தி வரும் சூழலில் அண்மைய நாட்களாக ஊட்டச்சத்து குறைபாட்டுடன் தொடர்புபட்டு தினசரி உயிரிழப்புகள் பதிவாகி வருகின்றன.

இவ்வாறு மேலும் 5 பலஸ்தீனர்கள் பட்டினியால் உயிரிழந்திருப்பதாக காசா சுகாதார அமைச்சு நேற்று வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்மூலம் காசாவில் ஊட்டச்சத்து குறைபாட்டால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 193 ஆக அதிகரித்துள்ளது. இதில் 96 சிறுவர்கள் அடங்குகின்றனர்.

காசாவுக்கு அனுப்பப்படும் உதவிகள் மிகக் குறைவானது என்றும் அங்கு நிலவும் பட்டினி நெருக்கடியை தீர்ப்பதற்கு போதுமானதாக இல்லை என்றும் ஐக்கிய நாடுகள் மற்றும் உதவி நிறுவனங்கள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றன.

மறுபுறம் காசாவில் தொடரும் இஸ்ரேலிய சரமாரி தாக்குதல்களில் கடந்த 24 மணி நேரத்தில் உதவி பெற காத்திருந்த 87 பேர் உட்பட குறைந்தது 135 பேர் கொல்லப்பட்டதோடு மேலும் 771 பேர் காயமடைந்திருப்பதாக காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி 22 மாதங்களை தொடும் காசா போரில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 61,158 ஆக அதிகரித்திருப்பதோடு மேலும் 151,442 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்நிலையில் காசா இராணுவ நடவடிக்கையின் அடுத்த கட்டம் தொடர் பேச்சவார்த்தை நடத்துவதற்கு இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சரவையை இன்று (07) கூட்டவுள்ளதாக அவரது அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தில் காசாவை முழுமையாக ஆக்கிரமிக்கும் இஸ்ரேலின் திட்டத்திற்கு ஒப்புதல் பெற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்தத் திட்டத்தால் காசாவில் உள்ள இஸ்ரேலிய பணயக்கைதிகளை இழக்கக் கூடும் என்றும் இந்த நகர்வு எந்த பலனையும் தராது என்றும் இஸ்ரேலிய இராணுவ அதிகாரிகள் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

மீண்டும் பணிநீக்கம் செய்தது மெட்டா

நிர்பயா வழக்கு 17ம் திகதி வரை  ஒத்திவைப்பு

APLLE பயனாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை !