நாவலப்பிட்டிய, இம்புல்பிட்டிய தோட்டத்திலுள்ள பாழடைந்த பங்களாவுக்குள் வைத்து பெண் ஒருவரின் கழுத்தை அறுத்து கொலை செய்த நபர் கம்பளை பொலிஸில் நேற்று (22) சரணடைந்த நிலையில், மேலதிக விசாரணைக்காக நாவலப்பிட்டிய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
நாவலப்பிட்டிய, இம்புல்பிட்டிய தோட்டத்தை சேர்ந்த 39 வயதான மூன்று பிள்ளைகளின் தாயே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
கொலை செய்யப்பட்ட பெண், சந்தேக நபருடன், கம்பளை, புசல்லாவை பகுதியில் 9 மாதங்களாக வசித்து வந்துள்ளார் எனவும் கடந்த 22 ஆம் திகதி தனது சட்டபூர்வ கணவரின் வீட்டுக்கு சென்றுள்ளார் எனவும், அங்கிருந்து மேற்படி நபருடன் தொலைபேசியில் உரையாடியுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த பெண் வீட்டு வேலைக்காக வெளிநாடு செல்ல திட்டமிட்டிருந்தார் எனவும், அதற்கு கள்ள தொடர்பை பேணிய நபர் கடும் எதிர்ப்பை வெளியிட்டு வந்தார் எனவும் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேற்படி பெண்ணுக்கு அழைப்பை ஏற்படுத்திய சந்தேக நபர் கடந்த 22 ஆம் திகதி பாழடைந்த பங்களாவுக்குள் அவரை அழைத்துள்ளார். அவ்வாறு சென்றபோதே கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார் எனவும் தெரிய வந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் நாவலப்பிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
-க.கிஷாந்தன்