களுத்துறை பிரதேச சபையின் 2026 ஆம் ஆண்டிற்காக இன்று (20) சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டம் ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது.
சபையின் அதிகாரத்தைக் கொண்டிருக்கும் தேசிய மக்கள் சக்தியின் தவிசாளர் அருண பிரசாத்தின் தலைமையில் இந்த வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டது.
இதனை நிறைவேற்றிக்கொள்வதற்கு முன்னர் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் சஞ்சீவ லலீந்திர வாக்கெடுப்பைக் (பிரிப்பு) கோரியதுடன், அதனை பொதுஜன ஐக்கிய முன்னணியின் உறுப்பினர் நிலந்த சந்திரலால் வழிமொழிந்தார்.
பின்னர் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது, இதில் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 15 வாக்குகளும், எதிராக 16 வாக்குகளும் கிடைத்தன.
தேசிய மக்கள் சக்தியின் 15 உறுப்பினர்கள் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்ததுடன், ஐக்கிய தேசியக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை.
களுத்துறை பிரதேச சபையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 32 ஆகும்.
இவர்களில் 15 பேர் தேசிய மக்கள் சக்தியையும், 17 பேர் ஏனைய கட்சிகளையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர்.
