முச்சக்கரவண்டியை கழுவுவதற்காக வாளியில் நீரை எடுக்க முற்பட்ட 21 வயதுடைய இளம் பெண் ஒருவர், களனி கங்கையில் தவறி வீழ்ந்து உயிரிழந்த சோக சம்பவம் நேற்று (01) மாலை பதிவாகியுள்ளது.
நுவரெலியா, பொகவந்தலாவையில் உள்ள தேயிலைத் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரியும் ஐந்து பேர் கொண்ட குழுவினர், கொழும்பு நோக்கிப் பயணிக்கும் வழியில், முச்சக்கரவண்டியை கழுவுவதற்காக கோகிலவத்தை பகுதியில் களனி கங்கை அருகே உள்ள வாகனங்களை கழுவும் நிலையத்திற்குச் சென்றுள்ளனர்.
அப்போது, முச்சக்கரவண்டியை கழுவுவதற்காக ஆற்றில் இருந்து வாளியில் தண்ணீர் எடுக்க முற்பட்ட குறித்த இளம் பெண், எதிர்பாராத விதமாக ஆற்றுக்குள் தவறி வீழ்ந்துள்ளதாக கூறப்படுகின்றது.
இதைப் பார்த்த அவருடைய 25 வயதுடைய காதலன், அவரைக் காப்பாற்றும் நோக்குடன் உடனடியாக ஆற்றுக்குள் குதித்துள்ளார்.
காதலன் அவருடன் வந்த குழுவினரால் பத்திரமாக மீட்கப்பட்ட போதிலும் ஆற்றில் மூழ்கிய இளம் பெண்ணைக் காப்பாற்ற முடியவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவம் குறித்து கோகிலவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
