கல்வி அமைச்சரும் பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக எதிர்க்கட்சி உறுப்பினர்களால் கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை, ஜனவரி 22 மற்றும் 23 ஆம் திகதிகளில் பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள அரசாங்கம் தயார் என அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
இன்று (13) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
கல்விச் சீர்திருத்தங்கள் தொடர்பில் இதுவரை இடம்பெற்றுள்ள விடயங்கள் மற்றும் எதிர்காலத்தில் இடம்பெறவுள்ள விடயங்கள் குறித்து பெருமளவான தகவல்களைத் தெளிவுபடுத்திக்கொள்ள, இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் ஒரு சந்தர்ப்பமாக அமையும் என்றும், எதிர்க்கட்சியினர் விரைவில் நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வருவார்கள் எனத் தான் எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அதற்கமைய, ஜனவரி 22 மற்றும் 23 ஆகிய இரு தினங்கள் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை விவாதத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளதுடன், தேவைப்படின் மேலும் நாட்களை வழங்குவதற்கும் அரசாங்கம் தயாராக உள்ளதென அமைச்சர் தெரிவித்தார்.
எதிர்க்கட்சியினர் பிரதமருக்கு எதிராக இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வரும் போது, கல்விச் சீர்திருத்தங்களின் உண்மைத் தன்மை மற்றும் யதார்த்தத்தை மக்களுக்குத் தெளிவாக எடுத்துரைக்க அரசாங்கத்திற்கு முடியுமாக இருக்கும் எனவும் அமைச்சர் மேலும் வலியுறுத்தினார்.
