எதுல்கோட்டையில் வியாழக்கிழமை (15) உள்ள ஐக்கிய மக்கள் சக்தி தலைமையகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், தற்போதைய அரசாங்கத்தின் திட்டமிடப்படாத கல்விச் சீர்திருத்த முயற்சி மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள நிதி விரயம் குறித்துக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.
அவர் அங்கு மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
கல்விச் சீர்திருத்தங்கள் ஊடாக பாடத்திட்ட மறுசீரமைப்பு மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியமானது என்றும், உலகளாவிய தொழில்நுட்ப மாற்றங்களுக்கு ஏற்ப ஒவ்வொரு எட்டு ஆண்டுகளுக்கும் ஒருமுறை இவ்வாறான மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என்றும் சுட்டிக்காட்டினார்.
எனினும், 2023 ஆம் ஆண்டிலேயே ஆரம்பிக்கப்பட்டிருக்க வேண்டிய இந்தப் பாடத்திட்ட மறுசீரமைப்பை மேற்கொள்வதில் கடந்த கால மற்றும் தற்போதைய அரசாங்கங்கள் தோல்வியடைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
கல்விச் சீர்திருத்தங்கள் தொடர்பாக வெள்ளை அறிக்கை ஒன்றைச் சமர்ப்பிக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்த போதிலும், அரசாங்கம் அதற்குப் செவிசாய்க்கவில்லை என்று குற்றம் சாட்டிய அவர், வெளிப்படைத்தன்மையற்ற முறையில் தமக்கு நெருக்கமான அரசியல் தரப்பினரை மட்டும் இணைத்துக்கொண்டு இத்திட்டத்தைச் செயல்படுத்த அரசாங்கம் முயன்றதாகக் குறிப்பிட்டார்.
கல்வித்துறையில் நீண்டகால அனுபவமுள்ள நிபுணர்களைப் புறக்கணித்து, ஒரு குறுகிய அரசியல் வட்டத்திற்குள் நின்றுகொண்டு எடுக்கப்பட்ட முடிவுகளே தற்போதைய தோல்விக்குக் காரணம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
குறிப்பாக, முன்மொழியப்பட்ட பாடத்திட்ட மறுசீரமைப்பானது ஒரு முழு ஆண்டுக்கானதாக அன்றி, வெறும் மூன்று மாதங்களுக்கு மட்டுமே தயாரிக்கப்பட்டுள்ளது என்ற அதிர்ச்சியூட்டும் தகவலையும் அவர் வெளியிட்டார்.
ஆசிரியர்களுக்கான வழிகாட்டி கையேடுகள் மற்றும் பயிற்சிகள் யாவும் மூன்று மாத காலப்பகுதிக்கே மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இரண்டாம் தவணைக்கான எந்தவொரு பாடக் கூறுகளும் (Modules) இதுவரை தயாரிக்கப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
முறையான திட்டமிடல் இன்றி ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டத்தினால், இறுதியில் நாட்டின் அப்பாவி மாணவர்களே அபாக்கியவான்களாக மாறியுள்ளனர்.
ஜனவரி மாதம் சீர்திருத்தங்களை ஆரம்பிப்பதாகக் கூறிய அரசாங்கம், அதற்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை மார்ச் மாதத்திலேயே வழங்குவதாகத் தீர்மானித்துள்ளது.
வசதிகள் இல்லாத நிலையில் மாணவர்கள் எவ்வாறு புதிய பாடத்திட்டத்தைக் கற்பார்கள் எனக் கேள்வி எழுப்பிய அவர், இந்தப் பிரச்சினை பின்தங்கிய பாடசாலை மாணவர்களைப் பாரதூரமாகப் பாதிக்கும் என்றும் தெரிவித்தார்.
மேலும், தோல்வியடைந்த இந்தத் திட்டத்திற்காக கல்வி அமைச்சு சுமார் 50 கோடி ரூபாயைச் செலவிட்டுள்ளதாகவும், மக்கள் வரிப்பணத்தில் வீணடிக்கப்பட்ட இந்தத் தொகைக்கு ஜனாதிபதி உள்ளிட்ட அமைச்சரவை முழுப்பொறுப்பையும் ஏற்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இது தொடர்பில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்ய சமகி ஜன பலவேகய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கடந்த 2015-2019 காலப்பகுதியில் எவ்வித அரசியல் பேதமுமின்றி கல்வி நிபுணர்களின் ஆலோசனையுடன் சீர்திருத்தங்கள் முன்னெடுக்கப்பட்டதை நினைவுகூர்ந்த அவர், வகுப்பு ஒன்றில் மாணவர்களின் எண்ணிக்கையை 35 ஆகக் குறைக்கும் திட்டத்தை தற்போதைய அரசு 40 ஆக அதிகரித்துள்ளதையும் விமர்சித்தார்.
“எதிர்ப்புகள் வந்தாலும் சீர்திருத்தங்களைச் செய்வோம்” என்று சவடால் அடித்த ஜனாதிபதியும் பிரதமரும், தற்போது தமது இயலாமையின் காரணமாகவும் திட்டமிடல் இன்மையாலும் அதனை ஒரு வருடத்திற்குப் பின்போட்டுள்ளனர்.
அரசாங்கத்திற்கு கல்விச் சீர்திருத்தங்களை முன்னெடுக்கும் திராணி இல்லை என்பது இதன் மூலம் உறுதியாகியுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தனது உரையில் மேலும் தெரிவித்தார்.
