கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் மாட்டிறைச்சியை கட்டுப்பாட்டு விலையில் விற்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன் பிரகாரம் ஒரு கிலோ தனி இறைச்சியை 2300 ரூபாவுக்கும் 250 கிராம் முள் சேர்க்கப்பட்ட ஒரு கிலோ இறைச்சியை 2000 ரூபாவுக்கும் விற்பனை செய்வது என்று விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நாளை வியாழக்கிழமை (24) தொடக்கம் இந்த நிர்ணய விலை அமுல்படுத்தப்படவுள்ளது.
கல்முனை மாநகர ஆணையாளர் ஏ.ரி.எம். றாபி தலைமையில் இன்று புதன்கிழமை, மாநகர சபையில் இறைச்சிக் கடைக்காரர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அவர்களது இணக்கத்துடன் இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் மாட்டிறைச்சியானது எல்லையின்றி மிகக் கூடிய விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக பொது மக்களிடம் இருந்து தொடர்ச்சியாக கிடைக்கப் பெற்று வருகின்ற முறைப்பாடுகளையடுத்து மாநகர ஆணையாளர், இறைச்சிக் கடைக்காரர்களை இன்று மாநகர சபைக்கு அழைத்து இறைச்சி விலையை கட்டுப்படுத்துவது தொடர்பாக, அவர்களுடன் கலந்துரையாடினார்.
இக்கலந்துரையாடலில் மாநகர ஆணையாளருடன் மாநகர சபையின் பிரதி ஆணையாளர் ஏ.எஸ்.எம். அஸீம், பொறியியலாளர் ஏ.ஜே.ஏ.எச். ஜெளசி, மற்றும் உள்ளூராட்சி உதவியாளர் தாரிக் அலி சர்ஜூன் ஆகியோரும் பங்குபற்றியிருந்தனர்.
இதன்போது பல்வேறு விடயங்களைக் கருத்திற் கொண்டு மேற்படி நிர்ணய விலையில் இறைச்சியை விற்பதற்கு தீர்மானிக்கப்பட்டிருக்கிறது.
மேலும், அனைத்து இறைச்சிக் கடைகளிலும் விலைப் பட்டியல் காட்சிப்படுத்தப்பட வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நாளை வியாழக்கிழமை (24) முதல் இந்த நிர்ணய விலையில்
இறைச்சி விற்கப்படுவதை உறுதி செய்யும் பொருட்டு கல்முனை மாநகர சபையின் வருமானப் பரிசோதகர்கள் மற்றும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களும் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
-அஸ்லம் எஸ்.மெளலானா