உள்நாடுபிராந்தியம்

கல்முனை பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையினருக்கும் – ஆலய பரிபாலன சபையினருக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல்

கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் மற்றும் கடற்கரைப் பள்ளிவாசல் நாகூர் ஆண்டகை தர்ஹா ஷரீப் நம்பிக்கையாளர் சபையினருக்கும், தரவை சித்தி விநாயகர் ஆலயம் மற்றும் கடற்கரை கண்ணகி அம்மன் ஆலய பரிபாலன சபையினருக்கும் இடையிலான சிநேகபூர்வ கலந்துரையாடல் ஒன்று பள்ளிவாசல் காரியாலயத்தில் இடம்பெற்றது.

இச்சந்திப்பில் இரண்டு சமூகங்களுக்கிடையில் பல ஆண்டுகளாகத் தழைத்தோங்கும் ஒற்றுமை, சமூக நல்லிணக்கம் ஆகியவை மேலும் வலுப்பெற வேண்டும் என்பதில் இரு தரப்பினரும் ஒருமித்த கருத்தைப் பதிவு செய்தனர்.

மேலும், இவ்வாரம் இடம்பெறவிருக்கும் 204வது கொடியேற்ற விழா அமைதியாகவும், வெற்றிகரமாகவும் நடைபெறுவதற்கு இரு சமூகங்களினதும் பங்களிப்புகள் குறித்தும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

விழாக் காலங்களில் போக்குவரத்து, ஒழுங்கு, பாதுகாப்பு ஆகிய விடயங்களில் இரு சமுதாயங்களின் ஒத்துழைப்பைத் தொடர்ந்து பேணுவது தொடர்பில் முக்கிய தீர்மானங்கள் எட்டப்பட்டன.

இச்சந்திப்பில் கடந்த வருட கொடியேற்று விழாவிற்கு ஆலய பரிபாலன சபையினர்கள் அதிதிகளாக அழைக்கப்பட்டதும், கந்தூரி அன்னதானத்தினை தமிழ் சகோதரர்களுக்கு பிரத்தியேகமாக வழங்கிய விடயங்களை ஆலய பரிபாலன சபையினர்கள் பெரிதும் சிலாகித்து பேசியிருந்தனர்.

எதிர்காலத்திலும் இத்தகைய சகோதரத்துவத்தை மேலும் வலுப்படுத்த இணைந்து செயல்பட வேண்டியதன் அவசியம், கல்முனை பிராந்தியத்தின் சமூக நல்லிணக்கத்தை பாதுகாக்கவும், மேம்படுத்தவும் இரு தரப்பும் மேற்கொள்ள வேண்டிய கூட்டு முயற்சிகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது இச்சந்திப்பின் சிறப்பம்சமாகும்.

இந்த சந்திப்பானது, பிராந்தியம் எதிர்நோக்கும் இதர சவால்களைக் கூட இரு தரப்பு சமூகங்களும் ஒன்றாக அமர்ந்து பேசி, நிரந்தர தீர்வுகள் காணக்கூடிய புதிய நம்பிக்கைகளை பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

-நூருல் ஹுதா உமர்

Related posts

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு பூட்டு

மீளவும் நாடளாவிய ரீதியாக ஊரடங்கு உத்தரவு

சிறைச்சாலைக்குள் 13 தொலைபேசிகள் மீட்பு