கல்முனை, அக்கரைப்பற்று, பொத்துவில் போக்குவரத்து சபை டிப்போக்களுக்கு புதிய பஸ்களை வழங்குவதுடன், தற்காலிகமாக கல்முனை டிப்போவுடன் இணைக்கப்பட்ட சம்மாந்துறை போக்குவரத்து சபை டிப்போவை சம்மாந்துறைக்கு மீண்டும் வழங்க வேண்டும்
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகம் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் விஷேட கூட்டத்தில் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை கோரிக்கை
கல்முனை, அக்கரைப்பற்று, பொத்துவில் பிரதேசங்களில் அமைந்துள்ள இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான டிப்போக்களுக்கு புதிய பஸ்களை வழங்குமாறும், சென்ற அரசாங்க காலத்தில் தற்காலிகமான முறையில் கல்முனை டிப்போவுடன் இணைக்கப்பட்ட சம்மாந்துறை இலங்கை போக்குவரத்து சபை டிப்போவை சம்மாந்துறைக்கு மீண்டும் வழங்க வேண்டும்.
இது தொடர்பாக நான் பாராளுமன்றத்திலும் அமைச்சின் ஆலோசனைக் கூட்டத்திலும், இலங்கை போக்குவரத்து சபைத் தலைவரிடமும் கோரிக்கை விடுத்தேன்.
சம்மாந்துறை இலங்கை போக்குவரத்து சபை டிப்போவுக்கான இடங்கள், அதற்கான வசதிகள் எல்லாம் இருப்பதனால் மீண்டும் சம்மாந்துறையில் டிப்போவை இயங்க வைப்பதற்கான ஏற்பாடுகளை அமைச்சர் பிமல் ரத்னாயக்க அவர்கள் மேற்கொள்ள வேண்டும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் விஷேட கூட்டம் 20.09.2025 ஆம் திகதி அமைச்சர் பிமல் ரத்னாயக்க தலைமையில் அம்பாறை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற போது அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை கோரிக்கை விடுத்தார்.
கல்முனை டிப்போவுடன் இணைக்கப்பட்டுள்ள சம்மாந்துறை டிப்போவை மீண்டும் சம்மாந்துறையில் இயங்க வைப்பது தொடர்பான விளக்கங்களை வழங்குமாறும் கிழக்கு மாகாண இலங்கை போக்குவரத்து சபையின் பிராந்திய பணிப்பாளர் திரு. விஜித்தவை அமைச்சர் பிமல் ரத்னாயக்க பணித்தார்.
இது விடயமாக விளக்கமளித்த கிழக்கு மாகாண இலங்கை போக்குவரத்து சபையின் பணிப்பாளர் திரு. விஜித்த கல்முனைக்கும் சம்மாந்துறைக்கும் இடையில் 7 கி.மீ தூரம் உள்ளதாகவும் சம்மாந்துறை முஸ்லிம் பள்ளிவாசல் சம்மாந்துறை டிப்போ தொடர்பாக கடிதம் ஒன்றை வழங்கி உள்ளதாகவும் தெரிவித்தார்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை சம்மாந்துறையில் 82 ஆயிரம் மக்கள் வாழும் பிரதேசமாகும், சம்மாந்துறை பிரதேசம் நகரமாக மாறி வரும் இக்கால கட்டத்தில் தற்காலிகமான முறையில் இணைக்கப்பட்ட சம்மாந்துறை டிப்போவை சம்மாந்துறக்கு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்ததுடன் சம்மாந்துறை டிப்போவுக்கான இடம், காணி, கட்டிடங்கள் உள்ளதாகவும், இது தொடர்பாக சம்மாந்துறை பிரதேச செயலாளரை விளக்கங்களை தெரிவிக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை கோரிக்கை விடுத்தார்.
அதனையடுத்து விளக்கமளித்த சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம். ஹனீபா, தற்காலிகமான முறையில் கல்முனை டிப்போவுடன் இணைக்கப்பட்டுள்ள சம்மாந்துறை டிப்போவுக்கான சகல வசதிகளும் உள்ளதாகவும், சம்மாந்துறை மக்கள் போக்குவரத்துக்கு சம்மாந்துறை டிப்போ மிக முக்கியமானது என தெரிவித்தார்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த பிரதி அமைச்சர் திரு. வசந்த பியதிஸ்ஸ சம்மாந்துறை மக்களின் போக்குவரத்துக்கு அவசியமான டிப்போவை சம்மாந்துறைக்கு கொண்டு வருவதில் என்ன பிரச்சினை உள்ளது? எனவே, மக்கள் பிரதிநிதிகள் இந்த விடயத்தில் ஒன்றிணைந்து கோரிக்கை விடுக்கின்றனர்.
எனவே, சம்மாந்துறை டிப்போவை மீண்டும் கொண்டு வர வேண்டும் எனத் தெரிவித்தார்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் ஏ. ஆதம்பாவா சம்மாந்துறை டிப்போவை மீண்டும் சம்மாந்துறையில் இயங்க வைப்பதனால் சம்மாந்துறை டிப்போ அதிக வருமானம் ஈட்டும் டிப்போவாக மாறும் எனவும் மீண்டும் சம்மாந்துறையில் இயங்க வைப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளப்பட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
கல்முனையில் தற்காலிகமான முறையில் இணைக்கப்பட்டுள்ள சம்மாந்துறை டிப்போவினை மீண்டும் சம்மாந்துறைக்கு கொண்டு வருவது தொடர்பாக மக்கள் பிரதிநிதிகள் கோரிக்கை விடுப்பதனாலும், சம்மாந்துறை பிரதேச செயலாளர், சம்மாந்துறை டிப்போவுக்கான வசதிகள் உள்ளதென தெரிவித்துள்ளார்.
எனவே, முஸ்லிம் பள்ளிவாயல் கடிதம் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பையை தொடர்பு கொண்டு கடிதத்தினை பெற்று சம்மாந்துறை டிப்போவினை மீண்டும் சம்மாந்துறையில் இயங்குவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு அமைச்சர் திரு. பிமல் ரத்நாயக்க போக்குவரத்து அமைச்சின் உயர் அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.
அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கே.கோடீஸ்வரன் கருத்து தெரிவிக்கையில் வீரமுனை ஊரின் பெயர்ப் பலகையை வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் நட்டப்பட்டதனை சிலர் உடைத்துள்ளதாகவும் எனவே, வீரமுனை பெயர்ப் பலகையை நடுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த பிரதி அமைச்சர் திரு. வசந்த பியதிஸ்ஸ இனவாதம் இல்லாத ஆட்சி இந்த நாட்டில் ஏற்பட்டுள்ளதாகவும் தங்களின் ஊரின் பெயர் பட்டியல் பலகை நட முடியாத நிலைமையை ஏற்றுக் கொள்ள முடியாது என தெரிவித்ததுடன், இது தொடர்பாக வீரமுனை பெயர்ப் பலகையை உடைத்தவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை சம்மாந்துறை – வீரமுனை பிரதேச மக்கள் மத்தியில் சில பிரச்சினைகள் உள்ளதாகவும் இது தொடர்பாக அண்மையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் நிசாம் காரியப்பர் (PC), தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் திரு. எம்.ஏ. சுமந்திரன் (PC) ஆகியோர்கள் இரு சமூகங்களின் மத்தியில் ஏற்பட்டுள்ள பிரச்சினை தொடர்பாக பேச்சுவார்த்தையை மேற்கொண்டுள்ளதாகவும் சம்மாந்துறை – வீரமுனை பிரச்சினை தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று உள்ளதாகவும் எனவே இப்பிரச்சினை தொடர்பாக அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் திரு. சிந்தக்க அபே விக்ரம தலைமையில் விசேட குழு ஒன்றும் நியமித்து இக்குழுவில் சம்மாந்துறை பிரதேச செயலாளர், தவிசாளர், நாவிதன்வெளி பிரதேச செயலாளர், தவிசாளர் கலந்துரையாடி இப்பிரச்சினைகளை சுமூகமாக தீர்ப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதுடன் நாங்கள் எல்லோரும் ஒற்றுமைப்பட்டு இப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
வீரமுனை – சம்மாந்துறை விடயமாக மாவட்ட அரசாங்க அதிபர் திரு. சிந்தக்க அபே விக்ரம தலைமையில் விஷேட குழு நியமிக்கப்பட்டு இது தொடர்பான அறிக்கையினை பெறுவதாக தீர்மானிக்கப்பட்டது.
-கே எ ஹமீட்