கல்முனைப் பிரதேச செயலகத்தினை டிஜிட்டல் மயமாக்கும் பொருட்டு பொதுமக்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் பாவனைக்கான இரு செயலிகளை அறிமுகம் செய்து ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு பிரதேச செயலாளர் டி.எம்.எம் அன்சார் தலைமையில் இடம் பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட செயலாளர் திரு. சிந்தக்க அபேவிக்ரம கலந்து கொண்டு பொதுமக்களுக்கான இலத்திரனியல் சேவை வழங்கும் செயலியினைத் திறந்து வைத்தார்.
இச்சேவை மூலம் பொதுமக்கள் தமக்கு வழங்கப்படுகின்ற, வழங்கப்பட்டுள்ள சேவைகள் தொடர்பான தகவல்களை அறிந்து கொள்ளுதல், பிரதேச செயலாளர் மற்றும் ஏனைய உத்தியோகத்தர்களை சந்திப்பதற்கான நேரத்தை ஒதுக்குதல், மேலும் வீட்டில் இருந்தவாறே ஒரு சில சேவைகளைப் பெற்றுக் கொள்ளுதல் போன்ற பயன்களைப் பெற்றுக் கொள்வதோடு உத்தியோகத்தர்களுக்கான லீவு, Advance Program, Diary Extract மேலும் அவர்கள் வேலை செய்யும் திறனை பரிசோதிக்கும் வகையிலான மேற்பார்வை வசதி என்பனவற்றைக் கொண்ட இரு செயலிகள் பாவனைக்காக வழங்கப்பட்டது.
அம்பாறை மாவட்டத்தில் கல்முனை பிரதேச செயலகம் முன்னோடியாக திகழ வேண்டும் என்ற பிரதேச செயலாளரின் எண்ணக்கருவில் உருவான இத்திட்டம் எதிர்வரும் ஒரு மாதத்திற்கு பரிசோதனை பயன்பாட்டுக்காக விடப்பட்டு மேலும் விஸ்தரிக்கப்படவுள்ளது.
இதற்கான தொழிநுட்ப உதவிகளை வழங்கிய கல்முனை பிரதேச செயலகத்தின் உதவி கணினி உத்தியோகத்தர் எஸ்.எல். பர்ஹானா, அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.ஜே.ஏ. ஆஹாஸ் மற்றும் கல்முனையில் முன்னணி மென்பொருள் நிறுவனமான Marazin (PVT) Ltd. இன் ஸ்தாபகர் எம்.எம். மத்தீன் மற்றும் குழுவினர் மேற்கொண்டிருந்தனர்.
-பாறுக் ஷிஹான்
