உள்நாடு

கலால் வரி சட்டங்களை மீறிய 1,320 பேர் கைது – அனுமதிப்பத்திரம் பெற்ற 3 விற்பனை நிலையங்களுக்கு சீல்

புத்தாண்டு காலப்பகுதியில் மதுவரித் திணைக்களத்தால் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் கலால் வரிச் சட்டங்களை மீறி செயற்பட்ட 1,320 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள மதுவரித் திணைக்கள பிரதி ஆணையாளர் ஏ.ஏ. ரொஷான் பெரேரா இதனைத் தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 03 முதல் ஏப்ரல் 17 வரை தமிழ் – சிங்கள புத்தாண்டு காலப் பகுதியில் சட்டவிரோத மதுபானம் மற்றும் போதைப்பொருள் ஆகியன நாடு முழுவதும் பரவுவதை தடுக்கும் பொருட்டும், மதுவரி வருமானத்தை பாதுகாக்கும் பொருட்டும், சமூகப் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் சுட்டிக் காட்டியுள்ளது.

மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போதே இக்கைது நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சோதனை நடவடிக்கைகளின் போது, கலால் வரி திணைக்களத்தின் விதிமுறைகளை மீறி மதுபான விற்பனையில் ஈடுபட்ட அனுமதிப்பத்திரம் பெற்ற 3 மதுபான விற்பனை நிலையங்களுக்கு சீல் வைக்கவும் கலால் வரி திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

குறித்த நிலையங்களுக்கு எதிராக உச்சபட்ச சட்டநடவடிக்கை எடுக்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபான விற்பனை நிலையங்களும் புத்தாண்டையொட்டி ஏப்ரல் 11ஆம் திகதி முதல் இன்று (14) வரை மூடுமாறு பணிக்கப்பட்டுள்ளன.

இக்காலப் பகுதியில் வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ளும் விற்பனை நிலையங்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதேவேளை குறித்த சுற்றிவளைப்புகளில் பெரும்பாலானவை 1913 எனும் உடனடி தொலைபேசி மூலம் பொதுமக்களால் தமக்கு கிடைக்கப் பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டவையென, திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது

Related posts

சஜித் ஹிருணிகாவை சந்தித்தார்

போரா மாநாடு:கொழும்பு- காலி வீதியில் வாகன நெரிசல்: மாற்று வழிகள்

ஈ.டீ.ஐ பிரதான காரியாலயத்திற்கு முன்பு போராட்டம்