தொல்பொருள் மற்றும் தொல்பொருள் அகழ்வாராய்ச்சிகள் பற்றிய அனைத்து தகவல்களையும் மையமாகக் கொண்ட தரவுத் தளமொன்றைப் பராமரிக்க வேண்டியதன் அவசியம் குறித்து அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவில் (கோபா) கவனம் செலுத்தப்பட்டது.
தொல்பொருளியல் திணைக்களத்தின் 2021, 2022 மற்றும் 2023ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கைகள் மற்றும் அதன் செயலாற்றுகை குறித்து ஆராயும் நோக்கில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் அவர்களின் தலைமையில் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு அண்மையில் (06) பாராளுமன்றத்தில் கூடியபோதே இதுபற்றிக் கலந்துரையாடப்பட்டது.
இந்தக் குழு 2023 ஆண்டு ஒக்டோபர் மாதம் 03ஆம் திகதி கூடியபோது நாட்டில் உள்ள அனைத்து தொல்பொருள் அகழ்வாராய்ச்சி தளங்கள், அவற்றில் கண்டுபிடிக்கப்பட்ட விடயங்கள் மற்றும் அவற்றின் வெற்றி தோல்விகள், அகழ்வாராய்ச்சிகள் தொடரப்பட வேண்டுமா, எவ்வாறான இடங்களில் அகழ்வாராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் போன்ற விடயங்களை ஒரு தரவுத்தளத்தில் உள்ளீடு செய்து அதனைப் பராமரிக்க வேண்டும் என்ற பரிந்துரை வழங்கப்பட்டமை குழுவினால் சுட்டிக்காட்டப்பட்டது.
இது தொடர்பான தற்போதைய முன்னேற்றம் குறித்து குழுவின் தலைவர் கேள்வியெழுப்பினார்.
அனைத்து தகவல்களையும் உள்ளடக்கிய தரவுத்தளம் இன்னும் உருவாக்கப்படவில்லையென்றும், அகழ்வாராய்ச்சிகளுக்கு அனுமதிகளை வழங்குவது தொடர்பான தரவுத்தளம் மாத்திரமே பராமரிக்கப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மையப்படுத்தப்பட்ட தரவுத் தளமொன்றைத் தயாரித்து பராமரிப்பது முக்கியமானது என்றும், தேவைப்படும் பட்சத்தில் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் உதவியை வழங்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அத்துடன், குறித்த திணைக்களத்திற்கு மேலதிகமான தகவல் தொழில்நுட்ப அதிகாரிகள் இணைக்கப்பட வேண்டியதன் முக்கியத்துவத்தையும் குழுவின் தலைவர் வலியுறுத்தினார்.
பன்னிரண்டு தகவல் தொழில்நுட்ப அதிகாரிகளை இணைத்துக் கொள்வதற்கு நிர்வாக சேவைகள் திணைக்களத்தின் அனுமதி பெறப்பட்டுள்ள போதும், தற்பொழுது ஒரு அதிகாரியே பணியில் இருப்பதாகவும், அவர் தலைமையகத்திற்கு இணைக்கப்படவில்லையென்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
நிலவும் வெற்றிடங்களுக்குத் தேவையான அதிகாரிகளை விரைவில் நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு குழு அறிவுறுத்தியது.
தொல்பொருள் அகழ்வாராய்ச்சிகள் குறித்த அனைத்து புதுப்பிக்கப்பட்ட தகவல்களையும் உள்ளடக்கிய மையப்படுத்தப்பட்ட தரவுத்தளக் கட்டமைப்பொன்றுக்கான முன்மொழிவை மூன்று மாதங்களுக்குள் குழுவிடம் சமர்ப்பிக்குமாறும் குழுவின் தலைவர் அறிவுறுத்தினார்.
அத்துடன், தொல்பொருளியல் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் புதுப்பிக்கப்படாமை குறித்தும் குழு கவனம் செலுத்தியது.
குறிப்பாக, தொல்பொருளியல் திணைக்களத்தின் இணையதளத்தைப் புதுப்பிப்பது சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதில் மிகவும் முக்கியமானது என்று குழுவின் உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர்.
எனவே, இந்த விடயத்தில் கவனம் செலுத்தி இணையத்தளத்தைப் புதுப்பிப்பதற்கான பொறிமுறையொன்றை உருவாக்குமாறும் குழு வலியுறுத்தியது.
அதேநேரம், 2023ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் திகதி திணைக்களத்தினால் அடையாளம் காணப்பட்ட தொல்பொருள் தளங்களில் 48% வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்படாமை குறித்தும் குழு கவனம் செலுத்தியது.
வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்ட மற்றும் வெளியிடப்படாத தகவல்கள் அடங்கிய அறிக்கையை ஒரு மாத காலத்திற்குள் வழங்குமாறும் குழு அறிவுறுத்தல் வழங்கியது.
உலக மரபுரிமைகளாகப் பெயரிடுவதற்கு யுனெஸ்கோவினால் முன்மொழியப்படவிருக்கும் தளங்கள் மற்றும் அவை தொடர்பான வரைபுகள் அடங்கிய அறிக்கையை வழங்குமாறும் குழு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியது.
இக்குழுக் கூட்டத்தில் கௌரவ பிரதியமைச்சர்களான சுகத் திலகரத்ன, அரவிந்த செனரத், நளின் ஹேவகே மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான (கலாநிதி) எம்.எம்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, (மருத்துவர்) ஜனக சேனாரத்ன, ரி.கே.ஜயசுந்தர, சந்தன சூரியாராச்சி, (சட்டத்தரணி) சாகரிகா அதாவுட, (சட்டத்தரணி) துஷாரி ஜயசிங்க, ஒஷானி உமங்கா, லால் பிரேம்நாத், மஞ்சுள சூரியாராச்சி, ருவன்திலக ஜயகொடி மற்றும் சுனில் ரத்னசிறி ஆகியோர் கலந்துகொண்டனர்.
