கத்தார் நாட்டின் பொதுப்பணித்துறை அமைச்சு (Ashghal) மற்றும் பொது சுகாதார அமைச்சகம் இணைந்து முன்னெடுத்த, உலகின் மிகப்பெரிய ‘பாசிவ்’ ஆய்வகத் (World’s Largest Passive Laboratory) திட்டத்திற்கு, இலங்கையைச் சேர்ந்த சிரேஷ்ட கட்டுமானத் துறை நிபுணர் அப்துல் சுக்கூர் முஹம்மது பர்ஸாத் கின்னஸ் உலக சாதனை சான்றிதழைப் பெற்றுள்ளார்.
கத்தாரில் நிர்மாணிக்கப்பட்ட இந்த ஆய்வகம், பிராந்தியத்தின் சுகாதார மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாட்டில் ஒரு முக்கிய மைல்கல்லாகும். புதுமை மற்றும் நிலைபேறான தன்மைக்கு (Sustainability) கத்தார் வழங்கும் முன்னுரிமையை இத்திட்டம் உலகிற்கு பறைசாற்றியுள்ளது.
இந்த பிரம்மாண்டமான திட்டத்தின் வர்த்தக ஆரம்பம் (Commercial Commencement) மற்றும் ஒப்பந்தங்களை நிறைவு செய்யும் (Contract Closure) பணிகளில் பர்ஸாத் சுக்கூர் ஆற்றிய காத்திரமான பங்களிப்பை அங்கீகரித்து இச்சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
பொதுப்பணித்துறை அதிகார சபையின் (Ashghal) கட்டிடத் துறை பொறியியலாளர் ஜாரல்லா முகமது அல்-மரி (Eng. Jaralla Mohamed S A Al-Marri) அவர்களிடமிருந்து பர்ஸாத் சுக்கூர் இந்தச் சான்றிதழைப் பெற்றுக் கொண்டார்.
“இந்த கின்னஸ் உலக சாதனை கத்தாருக்கு பெருமை சேர்ப்பது மட்டுமல்லாமல், இது போன்ற பாரிய திட்டங்களை முன்னெடுக்கும் குழுப்பணி மற்றும் தொலைநோக்குப் பார்வைக்கு ஒரு சிறந்த சான்றாகும்.
சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த ஒரு திட்டத்தில் பணியாற்றி, அதற்கு உலகளாவிய அங்கீகாரம் கிடைப்பதைக் காண்பதில் பெருமிதம் கொள்கிறேன்,” என பர்ஸாத் தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார்.
இலங்கையின் அம்பாறை மாவட்டத்தில் மருதமுனையை பிறப்பிடமாகக் கொண்ட இவர், முன்னாள் கூட்டுறவு முகாமையாளர் அப்துல் சுக்கூரின் புதல்வர் ஆவார்.
சிவில் பொறியியலாளர் (Civil Engineer) மற்றும் அளவையாளர் (Quantity Surveyor) எனப் பன்முகத் திறமை கொண்ட இவர், கட்டுமானத் திட்ட மேலாண்மையில் (MSc in Construction Project Management) முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார்.
இலங்கை பொறியியல் கவுன்சிலின் (Engineering Council of Sri Lanka) பதிவு செய்யப்பட்ட உறுப்பினர் என்பதுடன் இலங்கையின் பட்டய நிபுணத்துவ முகாமையாளரும் ஆவார். (Chartered Professional Manager). மத்திய கிழக்கு மற்றும் தெற்காசிய நாடுகளில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் பெற்றவர்.
தனது நீண்ட காலத் தொழில் வாழ்க்கையில், பர்ஸாத் சுக்கூர் ஒப்பந்த மேலாண்மை, வர்த்தக மூலோபாயம், செலவுக் கட்டுப்பாடு மற்றும் திட்டத் தலைமைத்துவத்தில் நிபுணத்துவம் பெற்றுள்ளார்.
பல முக்கிய அடையாளத் திட்டங்களை (Landmark Projects) வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள அவர், அர்ப்பணிப்புடனும் புத்தாக்க சிந்தனையுடனும் கட்டுமானத் துறையில் தொடர்ந்து இயங்கி வருகிறார்.
இந்த சர்வதேச அங்கீகாரம், அவரது தொழில்முறை பயணத்தில் ஒரு மிக முக்கிய மைல்கல்லாக அமைவதோடு, சர்வதேச அரங்கில் இலங்கையர்களின் திறமையை மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியுள்ளது.
மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரியின் பழைய மாணவரான இவர், 1997 ஆம் ஆண்டு கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றி சிறந்த பெறுபேறுகளை பெற்றதோடு 2000 ஆம் ஆண்டு கணிதப் பிரிவில் கல்வி கற்று தனது மேற்படிப்பைத் தொடர்ந்தார்
கே.அப்துல் சுக்கூர், யூ.எல். சித்தி ஜெசிமா ஆகியோருக்கு மூன்றாவது புதல்வர் (இரட்டையர்) 1982 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி பிறந்தார்.
இவருக்கு ஒரு சகோதரியும் மூன்று சகோதரர்களும் உள்ளனர். இவர்கள் தற்போது இலங்கையின் – மருதமுனையில் வாழ்ந்து வருகிறார்கள்.
-ஏ.எல்.எம்.ஷினாஸ்
