கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பான உயர் மட்ட மீளாய்வுக் கூட்டம் ஒன்று இன்று (23) நடைபெற்றது.
துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் பிரதி அமைச்சர் ஜனித் ருவன் கொடித்துவக்கு மற்றும் பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்த ஆகியோரின் தலைமையில் இக்கூட்டம் இடம்பெற்றது.
சர்வதேசத்திற்கு இலங்கையைத் திறந்துவிடும் பிரதான வான் வழியாகத் திகழும் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஒட்டுமொத்த பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டது.
இதன்போது கருத்துத் தெரிவித்த பாதுகாப்புச் செயலாளர், தேசிய பாதுகாப்பு, பொருளாதார வளர்ச்சி மற்றும் சர்வதேச உறவுகளில் விமான நிலையத்தின் முக்கிய பங்கினைக் குறிப்பிட்டு, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உயர் மட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பேணுவதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார்.
பயணிகள், விமானப் பணியாளர்கள், விமான நிலைய ஊழியர்கள் மற்றும் விமான நிலையச் செயற்பாடுகளுடன் தொடர்புடைய ஏனைய அனைத்து நபர்களின் பாதுகாப்பு மற்றும் நலனை உறுதி செய்வதன் முக்கியத்துவத்தையும் அவர் அங்கு சுட்டிக்காட்டினார்.
அத்துடன், விமான நிலையத்தின் செயற்பாடுகளைப் பேணுவதற்காக அனைத்துத் தரப்பினரதும் அர்ப்பணிப்பை அவர் பாராட்டியதுடன், விமான நிலையத்தில் உயர் மட்ட பாதுகாப்பு மற்றும் பாதுகாப்புத் தரங்களைப் பேணுவதற்கு தொடர்ச்சியான ஒருங்கிணைப்பின் அவசியத்தையும் வலியுறுத்தினார்.
சட்டவிரோதச் செயற்பாடுகளைத் தடுத்தல், நிறுவனங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பை மேம்படுத்துதல் மற்றும் சாத்தியமான அச்சுறுத்தல்களுக்கு தற்போதுள்ள பதில் பொறிமுறைகளை மேம்படுத்துதல் குறித்தும் இந்தக் கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் கலந்துகொண்ட அதிகாரிகள், தத்தமது துறைகளில் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து இங்கு கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டதுடன், நிலவும் நடைமுறைகளின் வினைத்திறனை மேம்படுத்துவதற்கான நடைமுறைத் தீர்வுகளையும் முன்வைத்தனர்.
அனைத்து நிறுவனங்களின் ஒத்துழைப்பையும் மேலும் வலுப்படுத்தி, விமான நிலையத்தின் பாதுகாப்பு முகாமைத்துவத்தை மிகவும் வினைத்திறனான மற்றும் ஒருங்கிணைந்த அணுகுமுறையின் மூலம் பேணுவதற்கு விசேட ஒருங்கிணைந்த பொறிமுறையொன்றை அமைப்பதற்கும் இந்த சந்திப்பில் ஏகமனதாக இணக்கம் தெரிவிக்கப்பட்டது.
இந்தக் கலந்துரையாடலைத் தொடர்ந்து, பிரதி அமைச்சர், பாதுகாப்புச் செயலாளர் மற்றும் ஏனைய உயர் அதிகாரிகள், விமான நிலையத்தில் தற்போது நடைமுறையில் உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கண்டறிவதற்காக அந்த வளாகத்தில் கண்காணிப்பு விஜயமொன்றிலும் ஈடுபட்டனர்.