இஸ்ரேல் அண்மையில் கட்டாரின் தலைநகரான டோஹாவில் உள்ள ஹமாஸ் அமைப்பினரின் சந்திப்பு ஒன்றை இலக்கு வைத்து நடத்திய தாக்குதலுக்குப், கட்டார் பிரதமர் ஷேக் முஹம்மது பின் அப்துல்ரஹ்மான் அல் தானி, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பை நியூயார்க்கில் சந்தித்துப் பேசினார்.
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் முன்மொழிந்த புதிய ஒப்பந்தம் குறித்து விவாதிப்பதற்காக, டோஹாவில் நடைபெற்ற ஹமாஸ் சந்திப்பைக் குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.
இந்த தாக்குதல், காசாவில் போர் நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தைகளைப் பாதிக்கும் என அமெரிக்கா கவலை தெரிவித்தது.
இந்த வார தொடக்கத்தில், அமெரிக்கா பொதுவாக இஸ்ரேலுக்கு ஆதரவாக இருந்த போதிலும், ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் கத்தார் மீதான இஸ்ரேலின் தாக்குதலைக் கண்டித்து ஏனைய நாடுகளுடன் இணைந்து கொண்டது.
டோஹா மீதான இஸ்ரேலின் தாக்குதலால் ஜனாதிபதி டிரம்ப் அதிருப்தியடைந்துள்ளார். இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடனான தொலைபேசி உரையாடலில் தனது கோபத்தை அவர் வெளிப்படுத்தியதாகவும், இதுபோன்ற தாக்குதல்கள் மீண்டும் இடம்பெறாது என்று கட்டாருக்கு உறுதியளித்ததாகவும் கூறப்படுகிறது.
இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கும், பிராந்தியத்தில் அமைதிப் பேச்சுவார்த்தைகளில் கட்டாரின் முக்கியப் பங்கையும் இந்தச் சந்திப்பு உறுதிப்படுத்தியுள்ளது.
மத்திய கிழக்கில் அமெரிக்காவின் வலுவான நட்பு நாடாக கட்டார் திகழ்வதாகவும், அமைதிப் பேச்சுவார்த்தைகளில் அதன் பங்கு மிகவும் முக்கியமானது என்றும் அமெரிக்கா கருதுகிறது.
ஹமாஸ் தலைவர்கள், அமெரிக்கா முன்மொழிந்த போர்நிறுத்த ஒப்பந்தம் குறித்து விவாதித்துக் கொண்டிருந்த போது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது.
இந்தத் தாக்குதல் சமரசப் பேச்சுவார்த்தைகளைத் தகர்க்கும் முயற்சி என கட்டார் குற்றம் சாட்டியுள்ளது.
இஸ்ரேல் நடத்திய இந்த வான்வழித் தாக்குதல், பிராந்தியத்தில் ஏற்கனவே நிலவிவரும் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.
இது மத்திய கிழக்கில் உள்ள ஏனைய நாடுகளையும் கவலைக்குள்ளாக்கியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் குழுவும் இஸ்ரேலின் இந்த நடவடிக்கையைக் கண்டித்துள்ளது.
இந்த உயர்மட்ட சந்திப்பு, இரு நாடுகளுக்கும் இடையே ஒரு இராஜதந்திர சமநிலையைப் பேணுவதற்கான முயற்சியாகக் கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த வார இறுதியில், அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ இஸ்ரேலுக்கு விஜயம் செய்ய உள்ளார்.
கட்டாரை வளைகுடா பிராந்தியத்தில் ஒரு வலுவான நட்பு நாடாக வொஷிங்டன்கருதுகிறது, ஏனெனில் அமெரிக்காவின் அல் உதேத் விமானப்படைத் தளம் அங்கு அமைந்துள்ளது.
கட்டார் மீதான இஸ்ரேலின் தாக்குதல்களின் காரணமாக அமெரிக்காவுக்கும் கட்டாருக்கும் இடையிலான உறவுகள் மிகவும் சிக்கலாகியுள்ளது.
இந்தத் தாக்குதலில் ஒரு கட்டார் பாதுகாப்பு அதிகாரி மற்றும் ஐந்து ஹமாஸ் உறுப்பினர்கள் கொல்லப்பட்டனர்.