கடல் கொந்தளிப்பு தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கையை வௌியிட்டுள்ளது.
சிலாபம் முதல் புத்தளம் வழியாக மன்னார் வரையிலும், காலி முதல் ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலும் உள்ள கடற்பரப்புகளுக்கு விடுக்கப்பட்டுள்ள இந்த எச்சரிக்கையானது அடுத்த 24 மணி நேரத்திற்கு அமுலில் இருக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்படி கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு 60 – 70 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும், மேலும் கடல் பகுதிகள் அவ்வப்போது கொந்தளிப்பாகவோ அல்லது மிகவும் கொந்தளிப்பாகவோ காணப்படும்.
புத்தளத்திலிருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலான கடற்கரைக்கு அப்பால் உள்ள கடற்பரப்புகளில் கடல் அலைகள் 2.5 – 3.0 மீட்டர் உயரம் வரை மேலெழும்பக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
இதன் காரணமாக புத்தளம் முதல் கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலான பகுதிகளில் கடல் அலைகள் கரைக்கு வருவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் கரையோரப் பிரதேசங்களில் வசிக்கும் பொதுமக்களும் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.