பேராதனை, ஈரியகம பகுதியில் உள்ள ஒரு வீட்டை சோதனை செய்து வீட்டிலிருந்து 469,000 ரூபா மதிப்புள்ள தங்க நகைகள் மற்றும் சொத்துக்களை திருடியதாகக் கூறப்படும் இரண்டு கடற்படை வீரர்களை பேராதனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கடற்படை புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் என்று கூறிக் கொண்ட சந்தேக நபர்கள் வீட்டுக்குள் நுழைந்து சோதனை செய்ததாகவும், பின்னர் பல நகைகள் மற்றும் பிற மின் சாதனங்களைத் திருடிச் சென்றதாகவும் வீட்டின் உரிமையாளர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட பேராதனை பொலிஸார், ரத்தோட்ட மற்றும் கொப்பேகடுவ பிரதேசங்களைச் சேர்ந்த 31 மற்றும் 32 வயதுடைய இரண்டு கடற்படை வீரர்களைக் கைது செய்துள்ளனர்.
தலாத்துஓயா கடற்படைத் தளத்தைச் சேர்ந்த இரண்டு வீரர்கள், போதைப்பொருள் இருப்பதாகத் தகவல் கிடைத்ததாகக் கூறியே குறித்த சோதனை செய்ததாக அந்தப் பெண் பொலிஸாரிடம் தெரிவித்தார்.
இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளில் இந்த இரண்டு வீரர்களும் கடற்படை புலனாய்வு அதிகாரிகள் என்பது தெரிய வந்துள்ளது.
சம்பவம் குறித்து பேராதனை பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.