உழவு இயந்திரம் – மோட்டார் சைக்கிள் விபத்தில் நபரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்துச் சம்பவம் இன்று வியாழக்கிழமை (7) வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி – கொழும்பு வீதி, பொத்தானை சந்தியில் வைத்து இடம்பெற்றுள்ளது.
வேளாண்மை அறுவடை செய்யும் உழவு இயந்திரமும் மோட்டார் சைக்கிளும் நேருக்குநேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிய வந்துள்ளது.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற காவத்தமுனை பனிச்சையடி வீதியைச் சேர்ந்த 33 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான இளம் குடும்பஸ்தர் அச்சி முகம்மட் பரீட் என்பவர் சம்பவ இடத்தில் மரணமடைந்துள்ளார்.
அவருடன் பயணித்த காவத்தமுனையை பிறப்பிடமாகவும், பிறைந்துரைச்சேனையை வசிப்பிடமாகவும் கொண்ட அசனார் முகம்மட் நிப்ராஸ் என்பர் பலத்த காயங்களுடன் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மரணமடைந்த நபரின் உடல் பரிசோதனை நடவடிக்கைகளுக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
-எச்.எம்.எம்.பர்ஸான்