அம்பாறை மாவட்டம் ஒலுவில் ஆத்தியடிக்கட்டு ஆற்றில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது திடீரென முதலை ஒன்று இளம் குடும்பஸ்தரை ஞாயிற்றுக்கிழமை (04) மாலை இழுத்துச் சென்று மாயமான நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இரண்டாம் நாளான இன்று (05) காலை மீண்டும் தேடுதல் மேற்கொள்ளப்பட்ட நிலையில் மாயமான இளம் குடும்பஸ்தரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
அத்துடன் நீரின் அளவு அதிகரிப்பு இருளின் மத்தியில் நேற்று (04) இரவு 10 மணி வரை தொடர் தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு இருந்த நிலையில் இன்று திங்கட்கிழமை (05) இரண்டாவது நாளாகவும் தீவிர தேடுதல் முன்னெடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந் நிலையில் காணாமல் போன இளம் குடும்பஸ்தர் ஒலுவில்-1 அஸ்ரப் நகர்-12 பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான அப்துல் குத்தூஸ் றமீஸ் (வயது-38) முதலை கடித்து உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த ஆற்றில் மூவர் மீன்பிடிக்க சென்ற நிலையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது டன் இரண்டு நாட்களாக பொதுமக்கள், அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய பிரதிப் பணிப்பாளர் ஏ.சி.ஏ. றியாஸ், சாய்ந்தமருது ஜனாஸா நலன்புரி மக்கள் பேரவை, பொலிஸ் உத்தியோகத்தர்கள், கடற்படை பிரிவினர் மற்றும் சம்மாந்துறை அல் – உஸ்வா போன்ற அமைப்புகளின் உதவியுடன் இந்த நபரின் சடலம் மீட்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மேலும் மீட்கப்பட்ட சடலத்தின் மீதான மரண விசாரணை திடீர் மரண விசாரணை அதிகாரி ஏ.எச்.அல்-ஜவாஹிர் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டு முதலை தாக்கியதால் ஏற்பட்ட மரணம் சம்பவித்துள்ளதாக குறிப்பிட்டு சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-அம்பாறை நிருபர் நூருல் ஹுதா உமர்
