உள்நாடு

ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்களின் பிறப்பு, திருமண பதிவுசான்றிதழ்கள் அழிவு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்களினால் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்களின் பிறப்பு மற்றும் திருமணப் பதிவுச் சான்றிதழ்கள் அழிக்கப்பட்டுள்ளதாகப் பதிவாளர் நாயகம் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்டவர்களுக்குப் புதிய பிறப்பு மற்றும் திருமணச் சான்றிதழ்களை வழங்குவதற்கான நடமாடும் சேவைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்வரும் ஜனவரி இறுதிக்குள் அதனைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பதிவாளர் நாயகம் திருமதி சசிதேவி ஜலதீபன் தெரிவித்துள்ளார்.

அண்மைய இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட சுமார் 2.2 மில்லியன் மக்களில் அரைவாசிக்கும் மேற்பட்டோர் இந்த தமது முக்கியமான ஆவணங்களை இழந்துள்ளதாக அந்த திணைக்களம் மதிப்பீடு செய்துள்ளது.

விசேட நடவடிக்கைகளின் கீழ் நாட்டின் 22 மாவட்டங்களில் பதிவுச் சான்றிதழ்கள் இலவசமாகவும், ஒரு நாள் துரித சேவை மூலமாகவும் வழங்கப்படுகின்றன என பதிவாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

அத்துடன், நிலச்சரிவு, வெள்ளம் உள்ளிட்ட இயற்கை அனர்த்தங்களினால் உயிரிழந்த அல்லது காணாமற் போன நபர்களுக்கான மரணச் சான்றிதழ்களை வழங்குவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அரசாங்கத்தின் க்ளீன் ஸ்ரீ லங்கா திட்டத்தின் கீழ் சில பகுதிகளில் நடமாடும் சேவையும் நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சான்றிதழ்கள் வழங்குவதற்கு அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் தேவையான ஆதரவை வழங்கி வருவதாகவும், சில சந்தர்ப்பங்களில் அரச சார்பற்ற நிறுவனங்களும் உதவி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுவரை, கொட்டாவ மற்றும் கண்டி மாவட்டத்தின் சில பகுதிகளிலும் நடமாடும் சேவை செயற்படுத்தப்பட்டுள்ளது.

பிறப்பு மற்றும் திருமணச் சான்றிதழ்கள் இல்லாதவர்கள் தொடர்பான தரவுகளை மாவட்ட துணைப் பதிவாளர்கள் தற்போது சேகரித்து வருகின்றனர்.

அடுத்த ஆண்டு ஜனவரி மாத இறுதிக்குள் இந்தப் பதிவேடுகளை வழங்கும் பணிகளை நிறைவு செய்ய திணைக்களம் இலக்கொன்றை நிர்ணயித்துள்ளதாகவும் பதிவாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

இன்றும் 562 பேர் நோயிலிருந்து மீண்டனர்

சட்டத்துக்கு முரணாக தேசிய விருதுகள், கௌரவ நாமங்களை பயன்படுத்துவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை

பாடசாலை மாணவர்களுக்கு அவசர அறிவிப்பு

editor