அனைத்து எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்தாலும் அரசியலில் எமக்கு எவ்வித சவாலும் ஏற்படப் போவதில்லை என மக்கள் விடுதலை முன்னணியின் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கிய போதே, அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அவர்கள் கடந்த காலத்தில் சேர்ந்தும் இருந்தார்கள், பிரிந்தும் இருந்தார்கள்.
அவ்வாறான சந்தர்ப்பங்களில் எமக்கு எந்த சவாலும் ஏற்படவில்லை.
சவால்கள் அவர்களுக்கே இருக்கிறது. ஒன்றிணைந்துள்ள 90 சதவீதமானவர்களுக்கு வழக்கு இருக்கின்றது.
குற்றங்களில் இருந்து தங்களை விடுவித்துக் கொள்வதற்காகவே இவ்வாறு கூடியுள்ளனர்.
சட்டம் அனைவருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும். சாதாரண மக்களுக்கு ஒருவிதமாகவும், பதவியில் இருப்பவர்களுக்கு ஒருவிதமாகவும் சட்டத்தை நடைமுறைப்படுத்த முடியாது.
எவர் தவறு இழைத்திருப்பினும் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆட்சியாளர்கள் தண்டிக்கப்படாவிட்டால் அவர்கள் மேலும் தவறுகள் செய்வதை தடுக்க முடியாது.
எது எவ்வாறாயினும் நீதிமன்றம் எடுக்கும் முடிவே இறுதியானதாகும் என டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.