பிரித்தானியா, ஜேர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய விமான நிலையங்கள் மீதான சைபர் தாக்குதலால் விமான சேவைகள் நேற்று மூன்றாவது நாளாகவும் பாதிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுதும் பல்வேறு விமான நிலையங்களில் பயணிகள் வருகை மற்றும் விமான புறப்பாட்டுக்கான தொழில்நுட்ப சேவையை அமெரிக்க விமானப் போக்குவரத்து நிறுவனமான ‘கோலின்ஸ் ஏரோஸ்பேஸ்’ வழங்கி வருகிறது.
இந்நிலையில் ‘கோலின்ஸ் ஏரோஸ்பேஸ்’ தளத்தின் மீது கடந்த வெள்ளிக்கிழமை (19 ஆம் திகதி) சைபர் தாக்குதல் நடந்துள்ளது.
பிரித்தானியாவின் லண்டனில் உள்ள ஹீத்ரோ, ஜேர்மனியின் பெர்லினில் உள்ள பிரண்டன்பர்க், பெல்ஜியத்தின் பிரஸ்ஸல்ஸ் உட்பட பல ஐரோப்பிய நாடுகளின் முக்கிய விமான சேவைக்கான மென்பொருள் தளம் பாதிக்கப்பட்டதால் கடந்த சனி, ஞாயிறு தினங்களில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டதோடு நேற்று மூன்றாவது நாளும் விமான சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
பெல்ஜியத்தின் பிரஸ்ஸல்ஸ் விமான நிலையத்தில் இருந்து நேற்று புறப்படவிருந்த 140 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. அதேபோன்று சனிக்கிழமை 25 விமானங்களும் ஞாயிற்றுக்கிழமை 50 விமானங்களும் ரத்து செய்யப்பட்டதாக பிரஸ்ஸல்ஸ் விமான நிலையத் தகவல்கள் தெரிவித்துள்ளன.
சில விமான நிலையங்களில் வருகை, லக்கேஜ் விவரங்களை கைகளில் எழுதி கொடுக்கப்பட்டதன் அடிப்படையில் அல்லது மடிக்கணினி பயன்படுத்தப்பட்டதன் அடிப்படையில் விமானங்கள் இயங்கி வருகின்றன.
இதற்கும் நடைமுறைகள் மெதுவாக நடைபெறுவதால் பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. பி.பி.சி