உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் களுத்துறை மாநகர சபைக்கு போட்டியிட்ட வேட்பாளர் ஒருவரை இலக்கு வைத்து களுத்துறையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் பந்துல பிரசன்ன என்ற நபரை இலக்கு வைத்து கடந்த 4 ஆம் திகதி பிற்பகல் குறித்த துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டது.
துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்ட சந்தேகநபர்கள் மூவருடன் இந்த குற்றச் செயலுக்காக பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் மற்றும் துப்பாக்கியையும் களுத்துறை குற்றப்பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் நடத்தப்பட்ட விசாரணைகளின் போது, சந்தேக நபர் ஒருவர் முதலில் கைது செய்யப்பட்டதோடு, அவரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளில் ஏனைய இரண்டு சந்தேக நபர்களும் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்காக பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியும் கைப்பற்றப்பட்டன.
இந்நிலையில், கைதான சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளில் பயாகல பகுதியின் பல இடங்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 6 மோட்டார் சைக்கிள்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
குறித்த சந்தேகநபர்கள் பல பகுதிகளிலிருந்து மோட்டார் சைக்கிள்களைத் திருடியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த மோட்டார் சைக்கிள்கள் களுத்துறை பகுதியில் இயங்கும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவின் உறுப்பினரான போம்புவல நவீன் என்பவரால் பல்வேறு குற்றச் செயல்களுக்காக வழங்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மூவரும் களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது