சர்வதேச ஒற்றுமையின் குறிக்கும் வகையில், அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான இரண்டாவது உதவிப் பொருட்களை ஏற்றிய ஐக்கிய அரபு இராஜ்ஜிய விமானப்படையின் C-17 Globemaster விமானம் நேற்று (02) பிற்பகல் இலங்கையை வந்தடைந்தது.
இந்த உதவியை ஐக்கிய அரபு இராஜ்ஜிய நிவாரணக் குழுவின் தலைவர் கலாநிதி ஹமூத் அல் அபாரி உத்தியோகபூர்வமாக கையளித்தார்.
இலங்கையின் சார்பாக தொழில் அமைச்சரும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ, துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அநுர கருணாதிலக்க மற்றும் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து பிரதி அமைச்சர் ஜனித ருவன் கொடிதுவக்கு ஆகியோர் உதவிப் பொருட்களை பொறுப்பேற்றனர்.
இந்த உதவிப் பொருட்களிடையே ஒரு குடும்பத்திற்கு 10 நாட்களுக்கு போதுமான 1,116 உலர் உணவுப் பொதிகள் மற்றும் தண்ணீர் போத்தல்கள், கூடாரங்கள், போர்வைகள், மெத்தைகள், சமையல் பாத்திரங்கள் மற்றும் சுகாதாரப் பொருட்கள் அடங்கிய 336 நிவாரணப் பொதிகள் என்பன அடங்கும்.
ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் முதலாவது உதவித் தொகை நேற்றுமுன்தினம் (01) நாட்டை வந்தடைந்தது.
-ஜனாதிபதி ஊடகப் பிரிவு
