அரசியல்உள்நாடு

ஐக்கிய அரபு அமீரகத் தூதுவர் சபாநாயகரைச் சந்தித்தார்

ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) இலங்கைக்கான தூதுவர் கௌரவ காலித் நாசர் அல் அமெரி இலங்கை பாராளுமன்றத்தின் கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்னவை அண்மையில் (25) பாராளுமன்றத்தில் மரியாதை நிமித்தமாகச் சந்தித்தார்.

பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீரவும் இச்சந்திப்பில் கலந்துகொண்டார்.

கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன அவர்கள், 1979 ஆம் ஆண்டு முதல் இலங்கைக்கும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் இடையிலான நீண்டகால இருதரப்பு உறவுகளை சுட்டிக்காட்டியதுடன், இலங்கைக்கும் அரபு நாடுகளுக்கும் இடையிலான பண்டைய காலத்திலிருந்து வரும் வரலாற்றுத் தொடர்புகளை அவர் நினைவுகூர்ந்தார்.

மத்திய கிழக்கில் உள்ள இலங்கை சமூகத்தினர் தேசிய பொருளாதாரத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஐக்கிய அரபு அமீரகம் இலங்கை தயாரிப்புகளுக்கான 7வது பெரிய ஏற்றுமதித் தலமாக உள்ளது என்றும் சபாநாயகர் சுட்டிக்காட்டியதுடன், வர்த்தக உறவுகளை மேலும் விரிவுபடுத்துவதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார்.

தூதுவர் காலித் நாசர் அல் அமெரி, இலங்கையின் புவியியல் இருப்பிடம், திறமையான மனித வளங்கள், கனிமச் செல்வம், இயற்கை அழகு மற்றும் சுற்றுலாத்துறை மீதான ஈர்ப்பு உள்ளிட்ட மூலோபாய நன்மைகளைச் சுட்டிக்காட்டினார்.

அதிக முதலீடுகளை ஈர்ப்பதற்காக இவற்றை ஊக்குவிக்க வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.

அண்மையில் கையெழுத்திடப்பட்ட முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் பாதுகாப்பு தொடர்பான ஒப்பந்தத்தைச் சுட்டிக்காட்டிய தூதுவர், இந்த ஒப்பந்தத்தை அமுல்படுத்த ஐக்கிய அரபு அமீரகம் ஆர்வமாக உள்ளதாகவும் இதன் மூலம் இலங்கைக்கு அதிக முதலீகள் வருவதற்கு வழிவகுக்கும் என்றும் தெரிவித்தார்.

அத்துடன், பொருளாதார உறவுகளை வலுப்படுத்தும் வகையில் ஐக்கிய அரபு அமீரகம் – இலங்கை வர்த்தக சபையை (UAE – Sri Lanka Business Council) செயற்படுத்துவதற்கான தனது எண்ணத்தையும் அவர் வெளிப்படுத்தினார்.

மேலும், இலங்கைக்கும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேம்படுத்துதல், பாராளுமன்ற மற்றும் கலாச்சார ஒத்துழைப்பை ஊக்குவித்தல் குறித்தும் இந்தக் கலந்துரையாடலின் போது கவனம் செலுத்தப்பட்டது.

Related posts

அரசியலமைப்புத் திருத்தமொன்றை மேற்கொள்ளும் தேவை எமக்கு காணப்படுகின்றது – சஜித் பிரேமதாச

editor

ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு – முற்தரப்பு ஒப்பந்தம் இன்று

மக்களின் வாழ்க்கை சீர்குலைத்துள்ளதை அரசாங்கம் ஏற்றுக்கொள்கிறதா ? சஜித் பிரேமதாச கேள்வி

editor