அரசியல்உள்நாடு

ஏமாற்று நடவடிக்கைகளை கைவிட்டு, அனைவரும் கைகோர்த்து நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப வேண்டும் – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

தற்போது நமக்கு இன்னும் பல சவால்கள் காணப்படுகின்றன. இந்த விடயங்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். ஒரு நாடாக நாம் 2028 முதல், ஆண்டுதோறும் 5.5 பில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டுக் கடனைச் செலுத்த வேண்டியுள்ளன.

இவ்வாறு இந்த கடனை செலுத்துவதற்கு, 2025, 2026 மற்றும் 2027 ஆகிய மூன்று வருடங்களிலும் குறைந்தபட்சம் 5% பொருளாதார வளர்ச்சி விகிதத்தை பேணிச் செல்ல வேண்டும்.

உலக வங்கியும், சர்வதேச நாணய நிதியமும் கணித்துள்ளதன் பிரகாரம், இக்காலப் பிரிவுகளில் நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் குறைந்த மட்டத்திலயே அமையும் என வெளிக்கொணரப்பட்டுள்ளது.

எனவே, அனைவரும் கைகோர்த்து பொருளாதாரத்தை கட்டியெழுப்ப வேண்டும். இன, மத, சாதி, வர்க்கம் மற்றும் கட்சி பேதங்களை கடந்து சகல மக்களும் இந்தப் பயணத்தில் எந்தவித பாகுபாடும் இல்லாமல் இணைந்து கொள்ள வேண்டும்.

5% பொருளாதார வளர்ச்சி வேகத்தை பேணிச் செல்ல முடியாதவிடத்து 2022 இல் ஏற்பட்ட நிலைமை மீண்டும் 2028 இல் ஏற்படும். இதனால் மக்களுக்கும் நெருக்கடிகளை சந்திக்க வேண்டி ஏற்படும். அவ்வாறு நேர்ந்தால் மோசமான துரதிர்ஷ்டவசமான சூழ்நிலைக்கு வழிவகுக்கும்.

இந்த நிலையை அடைவதற்கான எதிர்பார்ப்பு யாரிடமும் இல்லை. ஆகையால், அனைவரும் இந்த யதார்த்தத்தைப் புரிந்து கொண்டு இந்த இலக்குகளையும் சவால்களையும் கடக்க பாடுபட வேண்டும். இன்று நாட்டில் பொய்களும் ஏமாற்று வேலைகளுமே நடந்து வருகின்றன.

மக்கள் 24 மணி நேரமும் பொய்களால் ஏமாற்றப்பட்டுள்ளனர். செய்திகளை உருவாக்கி, இல்லாதவற்றை சொல்லி, இருப்பவற்றை அழித்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்த ஏமாற்று நடவடிக்கையால் 220 இலட்சம் மக்களே ஏமாற்றப்பட்டு வருகின்றனர். பணம் கொடுத்து, கூலிக்கு ஆட்களை வேலைக்கு அமர்த்தி, பல்வேறு பொய்களைப் பரப்பி பொய்யை கோலோச்சி வருகின்றனர்.

பணம் செலவிட்டு உருவாக்கப்படும் போலிச் செய்திகள் பரவ இடமளிக்கக் கூடாது. ஏமாற்று, பொய் மற்றும் நற்பெயருக்கு கலங்கம் ஏற்படுத்தல்களை விடுத்து உண்மையான சவாலை நாம் புரிந்து கொள்ள வேண்டும். பொய்யான நடவடிக்கைகள் மூலம் நாட்டு மக்களை ஏமாற்றும் வேலையைச் செய்யக் கூடாது. இன்று புத்த சாசனத்தை அழிக்கும் திட்டங்கள் கூட முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இவை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். பௌத்தத்திற்கும் போலவே சக மதங்களுக்கு உரிய இடங்களை வழங்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

வேரஹெர ஸ்ரீ சித்தார்த்தராம புராண ராஜமஹா விஹாரையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட தூபி மனை, கணினி மையத்துடன் கூடிய மூன்று மாடி அறநெறி கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் விழாவில் இன்று (04) கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

சம்புத்த சாசனத்தைப் பாதுகாப்பது நமது பொறுப்பாகும்.

சங்கைக்குரிய தேரர்கள் கிராமங்களை மையமாகக் கொண்டு, சாசனத்தின் முன்னேற்றத்திற்கும், சமாதானம், சௌபாக்கியம் மற்றும் நல்வாழ்வுக்காக ஆற்றும் பணிக்கு பக்க பலத்தை பெற்றுக் கொடுக்க வேண்டும். ஆரோக்கியமிக்க சமூகத்தையும், இரக்கசுபாவம் கொண்ட, ஒழுக்கமுள்ள, நாகரிகமான குடிமக்கள் தலைமுறையை உருவாக்குவதற்கு சங்கைக்குரிய மகா சங்கத்தினரால் ஆற்றப்படும் சேவைகள் அசாதாரணமானவையாக அமைந்து காணப்படுகின்றன. பல விகாரைகள் மூடப்பட்டு வரும் வேளையில், சமூகத்தின் மனித குணங்கள் கூட மறைந்து கொண்டிருக்கும் இந்நேரத்தில், புத்த சாசனத்தைப் பாதுகாப்பதும், மதத்தைப் பாதுகாப்பதும், நாட்டிற்கு செழிப்பைக் கொண்டுவருவதும் அனைவரினதும் பொறுப்பாக அமைந்து காணப்படுகின்றன என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

காலாவதியான கல்வி முறையில் இருந்து நாம் விலக வேண்டும்.

நமது நாட்டில் காலாவதியான கல்வி முறைமையே காணப்படுகின்றது. இலவசக் கல்வியை வலுப்படுத்தி, அதனை நவீனமயப்படுத்தி, புதுமைகளைச் சேர்தது, பழைய முறைமையில் காணப்படும் நல்லம்சங்களையும் பாதுகாத்துக் கொண்டு, நமது நாட்டில் ஸ்மார்ட் கல்வி முறைமையை முன்னெடுக்க வேண்டும்.

விஞ்ஞானம், தகவல் தொழில்நுட்பக் கல்வியில் தெளிவான மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். கல்வி முறைமையில் வரலாற்றுப் பாடத்தை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டால் அது தவறான நடவடிக்கையாகும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

வரலாற்றை ஒரு பாடமாகக் கற்பிக்க சந்தர்ப்பம் வழங்க வேண்டும்.

வரலாறு குறித்த அறிவு பாடசாலை மாணவர் மத்தியில் காணப்பட வேண்டும். பண்டைய நாகரிகங்கள் தொடர்பிலான புரிதலுடனும், புதிய சகாப்தத்திற்கு ஏற்ற நவீன கல்வி முறையுடனும் கூடிய நவீன உலகத்தை நோக்கி நாம் நகர வேண்டும்.

மனப்பாடம் செய்யும் கல்வி நடவடிக்கையில் இருந்து விலகி உலகில் எங்கும், எந்த பரப்பிலும் கவனம் செலுத்தி, தொழில் சந்தையில் தமது திறன்கள் மற்றும் ஆற்றல்களின் அடிப்படையில் போட்டி போட்டு, தொழில்களைப் பெறக்கூடிய குடிமக்களை உருவாக்கும் கல்வி முறைமையை நாம் ஆரம்பிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

Related posts

தற்போதைய நிலையில் வலுவாக தேர்தல் செயற்பாடுகளை முன்னெடுக்க முடியும்

அரச ஊழியர்கள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள விசேட நடவடிக்கை!

பாராளுமன்ற தேர்தலில் இரண்டு ஆசனங்களை கைப்பற்றுவோம் – அருண் சித்தார்

editor