எல்ல – வெல்லவாய வீதியில் இடம்பெற்ற விபத்தானது சாரதியின் கவனயீனத்தாலேயே ஏற்பட்டுள்ளதாக போக்குவரத்துப் பிரிவுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் இந்திக ஹபுகொட தெரிவித்துள்ளார்.
சாரதியினால் கட்டுப்படுத்த முடியாமல் போனதால் அது வீதியை விட்டு விலகி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதாக அவர் கூறியுள்ளார்.
கடந்த 4 ஆம் திகதி இரவு, சுற்றுலா சென்று திரும்பிய தங்காலை மாநகர சபை ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை ஏற்றிச் சென்ற பேருந்து, எல்ல – வெல்லவாய பிரதான வீதியின் 24வது மைல்கல் பகுதியில் பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் 15 பேர் உயிரிழந்த நிலையில் 17 பேர் காயமடைந்தனர்.
விபத்து குறித்து பல பிரிவுகள் ஊடாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், இன்று (08) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் போக்குவரத்துப் பிரிவின் பிரதி பொலிஸ்மா அதிபர் அது தொடர்பில் கருத்து வௌியிட்டார்.
“எல்ல – இராவணா எல்ல பகுதியில் இடம்பெற்ற விபத்து குறித்து விசேட விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
மோட்டார் வாகன ஆய்வாளர்கள் சென்று ஆராய்ந்துள்ளனர்.
பதுளை மற்றும் பண்டாரவளை பிரிவுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபரின் அறிவுறுத்தல்கள் மற்றும் உத்தரவுகளின் படி, விசேட விசாரணை இடம்பெறுகிறது.
பேருந்து சாரதியின் அலட்சியத்தால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. 25 வயதுடைய ஒருவரே பேருந்தின் சாரதியாக செயற்பட்டுள்ளார்.
அவரால் பேருந்தை கட்டுப்படுத்த முடியாமல் போகவே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக போக்குவரத்துப் பிரிவுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் இந்திக ஹபுகொட குறிப்பிட்டுள்ளார்.