அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

எம்.பிக்களின் ஓய்வூதியம் இரத்துச் செய்யப்படும் – அமைச்சர் வசந்த சமரசிங்க அதிரடி அறிவிப்பு

பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்துச் செய்வதற்கான திட்டம் எதிர்காலத்தில் செயல்படுத்தப்படும் என்று வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

அரசியல்வாதிகளுக்கு வழங்கப்படும் சலுகைகளைக் குறைப்பது தற்போதைய அரசாங்கத்தின் முதன்மையான நோக்கம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியத்தை இரத்துச் செய்வது தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நந்தன குணதிலக்க தெரிவித்த கருத்துக்கு பதிலளிக்கும் விதமாக அமைச்சர் வசந்த சமரசிங்க இந்தக் கருத்தை வெளியிட்டார்.

பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்துச் செய்யும் திட்டம் குறித்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நந்தன குணதிலக்க நேற்று (02) தனது பேஸ்புக் கணக்கில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார்.

அரசியலில் முழுநேர ஈடுபாட்டால் தான் வேலையை இழந்துள்ளதாகவும், இந்த சூழ்நிலையில் தனது ஓய்வூதியம் இரத்து செய்யப்பட்டால், தான் வாழ்வதற்கான வருமானம் இல்லாமல் போகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, அத்தகைய திட்டம் நிறைவேற்றப்பட்டால், அதை நிறைவேற்றுபவர்கள் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று கூறி, அவர் தனது பேஸ்புக் கணக்கில் அச்சுறுத்தும் அறிக்கையை வெளியிட்டிருந்தார்.

சம்பந்தப்பட்ட அறிக்கை தொடர்பாக அனுராதபுரம் பகுதியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர் வசந்த சமரசிங்க,

“அரசியல் செய்வது வாழ்வதற்காக அல்ல என்றும், நமக்கு ஒரு நாடு வேண்டும் என்பதை ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பும், பொதுத் தேர்தலுக்கு முன்பும் சொன்னோம். உலகில் வேறு எங்கும் இங்குள்ள சலுகைகள் இல்லை.

ஜனாதிபதிகள் ஓய்வு பெறும்போது அவர்களைப் பராமரிக்கும் பொறுப்பு மக்களிடம் ஏன் விடப்படுகிறது. அவர்களால் அந்த சுமையை தாங்க முடியவில்லை. நம் நாட்டில் இன்னும் மக்கள் கடுமையாக கஷ்டப்படும் பகுதிகள் உள்ளன.

மக்கள் பணத்திலிருந்து இவ்வாறான பயன்பாடுகளை நிறுத்துவோம். நாங்கள் ஜனாதிபதிகளின் சலுகைகளையும் அவர்களுக்காக உருவாக்கப்பட்ட சட்டங்களையும் மாற்றுகிறோம். பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியத்தையும் இரத்து செய்வோம்.

சொந்தமாக சட்டமூலங்களை உருவாக்கி மக்கள் மீது சுமையை சுமத்துவது நியாயமில்லை. தேர்தலுக்கு முன்பே நாங்கள் அதைச் சொன்னோம், அதைச் செயல்படுத்துவோம்.

அரசியலை அவர்களின் வாழ்வாதாரமாக மாற்றுவார்களானால், அது நாங்கள் நிராகரித்த ஒரு முறைமையாகும். அதற்காக யாரும் தற்கொலை செய்துகொள்ள தேவையில்லை.

அது இல்லாமல் வாழ முடியவில்லை என்றால் அஸ்வெசுமவுக்கு விண்ணப்பித்து அதனைப் பெற்றுக்கொள்ள முடியும்”

Related posts

ரிப்கான் பதியுதீன் மீண்டும் விளக்கமறியலில்

தாதியர்கள் இன்று பணிப்புறக்கணிப்பில்

நீரில் மூழ்கி காணாமல் போயிருந்த நான்கு பேர் – ஒருவரின் சடலம் மீட்பு

editor