அரசியல்உள்நாடு

ஊழல்வாதிகள் கடுமையாக கலக்கமடைந்துள்ளார்கள் – பிரதி அமைச்சர் சுனில் வட்டகல

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சட்டத்தின் பிரகாரம் கடுமையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதால் ஊழல்வாதிகள் கலக்கமடைந்து அவர் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறார்கள்.

அரச நிதியை மோசடி செய்தவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் பிரதி அமைச்சர் சட்டத்தரணி சுனில் வட்டகல தெரிவித்தார்.

கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (12) நடைபெற்ற நிகழ்வில் கலந்துக்கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

ராஜபக்ஷர்கள் உட்பட கடந்தகால ஊழல்வாதிகளின் ஊழல் மோசடிகள் வெளிவரும் போது பல ஊழல்வாதிகள் தற்போது அச்சமடைந்து கலக்கமடைந்துள்ளார்கள்.

அரச நிதியை மோசடி செய்தவர்களுக்கு எதிராக இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய ஆணைக்குழு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறார்கள்.

அரச நிதியை மோசடி செய்தவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

ரக்பி வீரர் தாஜூதீனின் படுகொலை தொடர்பில் புதிய விடயங்கள் வெளியாகும் போது நாமல் ராஜபக்ஷ அச்சமடைந்து பொலிஸ் திணைக்களத்தின் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறார்.

பொலிஸ்மா அதிபருக்கு அதிகாரங்களை வழங்குவது தொடர்பில் எதிர்க்கட்சியினர் மக்கள் மத்தியில் தவறான நிலைப்பாட்டை ஏற்படுத்தினார்கள்.

இந்த விடயம் தொடர்பில் எதிர்க்கட்சியின் உறுப்பினர் சுஜீவ சேனசிங்க பாராளுமன்றத்துக்கு பிரேரணை ஒன்றை கொண்டு வந்தார்.

இந்த பிரேரணையில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு அரசியலமைப்பின் ஊடாகவே பிரதமர் பதிலளித்தார்.

சுஜூவ சேனசிங்க முன்வைத்த குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் பொய்யானவை.

சுயாதீன பொலிஸ் ஆணைக்குழுவை அரசியல்மயப்படுத்த வேண்டிய அவசியம் அரசாங்கத்துக்கு கிடையாது.

ஆணைக்குழுவினால் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்துக்கு அமைவாகவே ஒருசில அதிகாரங்கள் பொலிஸ்மா அதிபருக்கு வழங்கப்படவுள்ளது.

பொலிஸ் ஆணைக்குழுவின் சுயாதீனத்துக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்றார்.

Related posts

மரதன் ஓட்ட போட்டியில் கலந்து கொண்ட மாணவன் மரணம்-திருக்கோவில் வைத்தியசாலை முன்பாக போராட்டம்

அரிசி விலைகள் மேலும் அதிகரிக்கும் சாத்தியம்

ஏப்ரல் 21 – மீளவும் ஆணைக்குழுவின் சாட்சி விசாரணைகள்