ஊழல்வாதிகளுக்கு இந்த அரசாங்கத்தில் இடமில்லை. தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஊழல்வாதிகளுக்கு எதிராகவே செயல்பட்டு வருகிறது இதை எமது சிறுபான்மை மக்கள் உணர்ந்து நடைபெற உள்ள உள்ளுராட்சி மன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு முழுமையான ஆதரவை வழங்க வேண்டும் என
காவத்தை பிரதேச சபை வேட்பாளர் பிரபாகர் பங்ராஸ் தெரிவித்தார்.
காவத்தை பிரதேசத்தில் இன்றைய தினம் (03) இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
இரத்தினபுரி மாவட்டத்தில் அதிக அளவிலான உள்ளூராட்சி மன்றங்களை தேசிய மக்கள் சக்தி கைப்பற்றும் என்பதில் எந்தவிதமான சந்தேகங்களும் இல்லை.
உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரங்களை தேசிய மக்கள் சக்திக்கு வழங்கினால் மாத்திரமே கிராமப்புற தோட்டப்புற மக்களின் அபிவிருத்திப் பணிகளை சிறந்த முறையில் முன் எடுத்துச் செல்ல முடியும் என்பதை மக்கள் நன்கு புரிந்துள்ளார்கள்.
எனவே இரத்தினபுரி மாவட்டத்தில் பெரும்பாலான உள்ளூராட்சி நிறுவனங்களை தேசிய மக்கள் சக்தி ஆட்சி அமைக்கும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தோட்டப்புறங்கள் மற்றும் கிராமப்புறங்களை அபிவிருத்தி செய்வதற்கு கூடுதலான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக இரத்தினபுரி மாவட்டத்தில் உள்ள தோட்டப்புற வீதிகள், ஆலயங்கள் மற்றும் பாடசாலைகள் உட்பட பல்வேறு அபிவிருத்திப் பணிகளை முன்னெடுத்து செல்வதற்காக பெருந்தோட்ட சமூக அபிவிருத்தி மற்றும் தோட்ட உட்கடைப்பு பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தலைமையில் பெருந்தொகையான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் இரத்தினபுரி மாவட்டத்தில் உள்ள கிராமப்புற தோட்டப்புற பிரதேசங்களை முழுமையாக அபிவிருத்தி செய்வதற்கு உள்ளூராட்சி சபைகளை பலப்படுத்த வேண்டும்.
இவ்வாறு நாங்கள் இந்த தேர்தலில் உள்ளூராட்சி மன்றங்களை பலப்படுத்துவதன் மூலம் எமது பிரதேசங்களுக்கு மேலும் தேவையான அபிவிருத்தி பணிகளை பெற்றுக் கொள்ள முடியும்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஒரு ஊழல் இல்லாத அரசாங்கமாக இயங்கி வருகிறது. இது அனைவருக்கும் நன்றாக தெரிந்து விடயம்.
ஊழலில் ஈடுபட்டு வருபவர்களையும் இனங்கண்டு அவர்களுக்கான சட்ட நடவடிக்கைகளையும் எமது அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது.
தற்போது ஆட்சியில் இருக்கும் அரசாங்கமே உள்ளூர் ஆட்சி மன்ற தேர்தலிலும் வெற்றி பெறும் என்பது நீங்கள் யாவரும் அறிந்து விடயமே.
எனவே இரத்தினபுரி மாவட்டத்தில் வாழ்கின்ற சிறுபான்மை மக்கள் அனைவரும் தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவு அளித்து ஜனாதிபதியின் கரங்களை பலப்படுத்த வேண்டுமென்று கேட்டுக்கொள்கின்றேன் என்று காவத்தை பிரதேச சபை வேட்பாளர் பிரபாகர் பங்ராஸ் மேலும் தெரிவித்தார்.
-சிவா ஸ்ரீதரராவ் இரத்தினபுரி நிருபர்