ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட கடத்தப்பட்டு காணாமல் போனது தொடர்பான வழக்கில், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் தற்போதைய பணிப்பாளர் ஷானி அபேசேகர சாட்சியாக பெயரிடப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் இன்று (16) கொழும்பு உயர் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு அறிவித்தார்.
நாமல் பலல்லே, மகேஷ் வீரமன் மற்றும் சுஜீவ நிசங்க ஆகிய மூவர் கொண்ட உயர்நீதிமன்ற அமர்வு முன் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
இதன்போது, பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பாக ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி உப்புல் குமரப்பெரும, இந்த வழக்கின் பிரதான புலனாய்வு அதிகாரி மற்றும் விசாரணையை மேற்பார்வையிட்ட ஷானி அபேசேகர ஆகியோர் சாட்சியாகப் பெயரிடப்படவில்லை என்று நீதிமன்றத்தில் குறிப்பிட்டார்.
அதன்படி, ஷானி அபேசேகரவை சாட்சியாளராகப் பெயரிட 2022 நவம்பர் 29ஆம் திகதியன்று நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்ததாகவும், அரசாங்க தரப்பில் ஆஜரான அப்போதைய பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ், அது பரிசீலிக்கப்படும் என்று தனக்குத் தெரிவித்ததாகவும் அவர் தெரிவித்தார்.
இருப்பினும், இன்றுவரையில் ஷானி அபேசேகர சம்பந்தப்பட்ட வழக்கில் சாட்சியாகப் பெயரிடப்படவில்லை என்று ஜனாதிபதி சட்டத்தரணி தெரிவித்தார்.
இந்த வழக்கில் ஷானி அபேசேகர ஏற்கனவே 109ஆவது சாட்சியாக பெயரிடப்பட்டுள்ளதாக அரசாங்க தரப்பின் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் வசந்த பெரேரா நீதிமன்றத்திற்குத் தெரிவித்தார்.
பின்னர், வழக்கின் மேலதிக விசாரணைகள் இந்த மாதம் 18 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது.
கிரிதல இராணுவ முகாமின் முன்னாள் கட்டளை அதிகாரி ஷம்மி அர்ஜுன குமாரட்ன உட்பட இராணுவ புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த ஒன்பது பேர் சம்பந்தப்பட்ட வழக்கில் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டுள்ளனர்.
2010 ஜனவரி 25 ஆம் திகதி அல்லது அதற்கு அண்மித்த திகதியொன்றில் பிரதிவாதிகள் கிரிதல, ஹபரணை மற்றும் கொட்டாவ ஆகிய பகுதிகளில் அடையாளம் தெரியாத ஒரு குழுவினருடன் சேர்ந்து இரகசியமாக சிறையில் அடைக்கும் நோக்கத்துடன், பத்திரிகையாளர் பிரகீத் எக்னலிகொடவைக் கடத்தி கொலை செய்ததாக குற்றவியல் சட்டத்தின் கீழ் சட்டமா அதிபர் பிரதிவாதிகளுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை தாக்கல் செய்திருந்தார்.