ஊடகவியலாளர் கீத் நொயர் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இராணுவ புலனாய்வுப் பிரிவின் முன்னாள் அதிகாரிகள் இருவரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த இருவரும் இன்று (02) கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் அவர்களுக்குப் பிணை வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி,சந்தேக நபர்கள் தலா 10 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
2008ஆம் ஆண்டு மே மாதம் 22ஆம் திகதி தெஹிவளை பகுதியில் வைத்து ஊடகவியலாளர் கீத் நொயர் கடத்தப்பட்டதுடன், கடுமையான தாக்குதலுக்கு உள்ளானார்.
இந்தநிலையிலே, குறித்த சம்பவம் தொடர்பில் 42 மற்றும் 46 வயதுடைய சந்தேகநபர்கள் இருவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் இன்று கைது செய்யப்பட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் 2018ஆம் ஆண்டு குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் வாக்குமூலம் பதிவு செய்திருந்தனர்.
அத்துடன், 2017ஆம் ஆண்டு இந்த சம்பவம் தொடர்பில் இராணுவ புலனாய்வு பிரிவின் 5 பேர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
